புகார் அளிக்க வருபவர்களிடம் பண மோசடி காவல் துணை ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் அதிரடி கைது

தாம்பரம்: திருவள்ளூர் மாவட்டம், பெருங்காவூரை சேர்ந்த செல்வி மீனா என்பவர் தனியார் கோல்டு நிறுவனத்தில் ரூபாய் 1 கோடிக்கு மேல் பணம் செலுத்தி மோசடி செய்யப்பட்டதால், அவருக்குத் தெரிந்த தாம்பரம் பகுதியை சேர்ந்த அக்பர் என்பவரிடம்  இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதற்கு அக்பர் தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக உள்ள சிவபெருமாள் தனக்கு தெரிந்தவர் தான் எனவே அவரை வைத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என செல்விமீனாவிடம் கூறி அவரிடம் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது சிவபெருமாள், கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி ஏற்கனவே அந்த வழக்கை விசாரித்தார் எனவே அவரிடம் சொல்லி பணத்தை பெற்று தருகிறேன் என கூறி அக்பரை அழைத்து சென்று பேசியுள்ளார்.

அப்போது விஜயலட்சுமி எனக்கும், அவ்வழக்குக்கும் சம்பந்தமில்லை நீங்கள் உயர் அதிகாரிகளை பாருங்கள் அல்லது மாவட்ட ஆட்சியரை பாருங்கள் என கூறி மறுத்துள்ளார். இருந்தாலும் சிவபெருமாள் அக்பரிடம் ஆய்வாளருக்கு பணம் தரவேண்டும் என ரூபாய் இருபதாயிரம் கேட்டு பெற்றுள்ளார். பின் போகவர செலவு என ரூபாய் பத்தாயிரம் என மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.

இப்பணத்தை அக்பர் செல்வி மீனாவிடம் இருந்து பெற்றுத்தந்துள்ளார். ஆனால் பணம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இது குறித்து நேற்று அக்பர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிவபெருமாள் பணம் பெற்றது உண்மையான தெரியவந்ததை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிவபெருமாள் இது போன்று காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பொதுமக்கள் பல பேரிடம் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் எனவும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதற்கு துணை போனதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தினால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories: