×

“திராவிட இயக்கம் என்பது ஒரு கட்சி அல்ல; இது ஒரு கொள்கை உணர்வு; இதை யாராலும் அழித்துவிட முடியாது' - முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: திராவிடக் கொள்கை உணர்வை யாராலும் அழிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார். கி.வீரமணி பிறந்தநாள் விழாவில்,  அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டமைப்பு வழங்கும் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினர். விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; என் உரையை தொடங்குவதற்கு முன்னால், பெரியார் பன்னாட்டு அமெரிக்க அமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது இந்த ஆண்டு என்னை தேர்வு செய்தமைக்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அதிலும் அய்யா ஆசிரியர் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். இந்தப் பெருமையை எனக்கு சேர்த்திருக்கக்கூடிய இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன் அவர்கள், பேராசிரியர் இலக்குவன் தமிழ், பேராசிரியர் அரசு செல்லையா, அருள்செல்வி வீரமணி உள்ளிட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்க நிர்வாகிகள் அனைவருக்கும் நான் என்னுடைய இதயப்பூர்வமான  நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். புரட்சிக் கவிஞர் - பாரதிதாசனின் பாடல் வரிகளில் இருந்து எனது வாழ்த்துரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். அண்ணா வைகோ அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், இளமை வளமையை விரும்பும் என்பர் இளமை எளிமையை விரும்பிய புதுமையை வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்!

பாடிக் கைவீசிப் பலருடன் உலவி வேடிக்கை பேசும் வாடிக்கை தன்னை அவரிடம் காண்கிலேன்! அன்றும் இன்றும் உற்றநோய் நோன்றாலும் ஊர்நலம் ஓம்பகும் நற்றவம் என்பவர்! தொண்டு மனப்பான்மை அந்தத் தூயனைக்  கொண்டது குழந்தைப் பருவத்திலேயே! அண்டிப் பிறரை அழிக்கவல்ல உண்டிக்கல்ல உயர்வுக்கல்ல தொண்டுக்காகக் கல்வித் துறையில் சேர்ந்தோன்! தமிழர் தமக்கும் தமிழ் மொழிக்கும் உழைப்பதே உயர்ந்த செல்வமாய்க் கொண்ட மாண்பார்! தமிழன் அடிமை தவிர்த்து குன்றென நிமிர்தல் வேண்டும் என்ற பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக் கருதிய கருத்து வீரமணியை வீண் செயல் எதிலும் வீழ்த்தவில்லை! ஆசிரியர் வீரமணி அவர்களை வீண் செயல் எதிலும் வீழ்த்தவில்லை என்பதை விட, வீணர்கள் எவராலும் அவரை வீழ்த்த முடியவில்லை என்பதன் அடையாளம்தான் இந்த 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!

இங்கு எல்லோரும் குறிப்பிட்டதைப்போல, 90 ஆம் ஆண்டு விழாவை மட்டுமல்ல - நூற்றாண்டு விழாவையும் நாங்கள் எடுப்போம் – ஏன், நூற்றாண்டைக் கடந்து அவருடைய பிறந்தநாளை இதே எழுச்சியோடும் - உணர்ச்சியோடும் கொண்டாடுவோம் என்பதன் அடையாளம்தான் இந்த விழா அமைந்திருக்கிறது. தமிழினத் தொண்டுக்காக - பகுத்தறிவு இயக்கத் தொண்டுக்காக மட்டுமல்ல, ஆசிரியர் அவர்களைத் தனிப்பட்ட முறையில்  நன்றி உணர்ச்சியோடு வாழ்த்துவதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில், நான் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்கிறேன். அதுதான் என்னுடைய முதல் சிறை அனுபவம், அப்போது எனக்கு 23 வயது. எனக்கு முன்னால், ஆசிரியர் அவர்களும் மற்ற தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்,

கொட்டடியுள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நான் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட அன்று, அங்கிருக்கக்கூடிய காவலர்களால் குண்டாந்தடியால் பலமாகத் தாக்கப்படுகிறேன். அப்போது என்மீது விழுந்த பெரும்பாலான அடிகளை, தன் உடம்பிலே தாங்கியவர் மறைந்த அண்ணன் சிட்டிபாபு அவர்கள். சிட்டிபாபு அவர்கள் மட்டுமல்ல, அண்ணன் ஆசிரியர் அவர்களும்தான், இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன். இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவாக இருந்தவன் நான் அடி தாங்க உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என்பதை அறியாத நிலையில் இருந்தவன் நான். அப்போது என் மீது விழுந்த அடியை தாங்கி, அதன்பிறகு மனதைரியத்தை கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள்.

தன்னுயிரையும் காத்து என்னுயிரையும் காத்த கருப்புச் சட்டைக்காரர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள். அதேபோல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது - இந்த ஆட்சி மீது அரசியல் எதிரிகள் விமர்சனத் தாக்குதல் நடத்தினால், எங்களுக்கு முன்னால் அதனைத் தடுக்கக்கூடிய கேடயமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள். எதிரிகள் மீது கொள்கை அம்பு பாய்ச்சும் சொல் வீச்சுக்காரராக செயல்படுபவர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள். தினந்தோறும் அவர் விடும் அறிக்கைகள் மூலமாக, நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் அத்தனையையும் நாங்கள்  தீர்மானிக்க வேண்டும். அண்ணன் வைகோ அவர்களும், நம்முடைய திருமா அவர்களும் சொன்னார்கள், தமிழக முதல்வருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும், இருக்கிறார், இருப்பார் என்று சொன்னார்கள்.

அதுதான் என்னை இந்த அளவிற்கு உற்சாகத்தை, ஊக்கத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் மறைவிற்குப் பிறகு திக்கற்ற நிலையில் இருந்த நேரத்தில் தைரியத்தை, தெம்பை ஊட்டி இன்றைக்கு திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உணர்ச்சி ஏற்படுத்தித் தந்தவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள்தான். நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுயமரியாதைச் சுடரொளி காட்டி வழிகாட்டுபவராக  நம்முடைய ஆசிரியர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதைத்தான், எனக்கு முன்னால் பேசிய தலைவர்கள் அனைவரும் சுட்டிக் காட்டினார்கள். கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், பத்து வயது சிறுவன் வீரமணி பேசுகிறார்.

அதனைப் பார்த்த பேரறிஞர் அண்ணா அவர்கள் அடுத்துப் பேசும் போது சொல்கிறார்.. இப்போது பேசிய சிறுவன் காதிலே குண்டலம் அணிந்திருந்தால், ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தன் என்று சொல்லி இருப்பார்கள். அது ஞானப்பால். ஆனால் இந்தச் சிறுவன் அருந்தியது பகுத்தறிவுப்பால் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தகைய பகுத்தறிவுப் பால் அருந்திய காரணத்தால் 90 வயதிலும் இளமையோடும், கொள்கைப் பிடிப்போடும் இருக்கிறார் நம்முடைய ஆசிரியர் அவர்கள்..

* 10 வயதில் கடலூரில் மேடை ஏறினார்.
* 11 வயதில் சேலம் மாநாட்டில் உரையாற்றினார்
* 12 வயதில் நாகை பொதுக்கூட்டத்தில் தலைமை தாங்குகிறார்.
* 13 வயதில் திருத்துறைப்பூண்டியில் கழகக் கொடியை ஏற்றுகிறார்.
* 14 வயதில் கடலூரில் இவர் பேசிக் கொண்டிருந்தபோது சவுக்கு கட்டை வீசப்பட்டது.
* 16 வயதில்  அண்ணா அவர்களிடம் தூது போனார்.

* 18 வயதில் கழகத்தின் இளம் பேச்சாளி என்று அழைக்கப்பட்டார்.
* 20 வயதில் இவரது கல்லூரிப் படிப்புக்காக நாடகம் நடத்தி நிதி தருகிறார் எம்.ஆர்.ராதா அவர்கள்.
* 25 வயதில் அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்துக்கான ஷரத்தை எழுதித் தருகிறார்.
* 28 வயதில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்
* 30 வயதில் விடுதலை ஆசிரியர்- இப்படியே நான் சொல்லிக்  கொண்டிருந்தால் விடிந்துவிடும். இத்தகைய விடிவெள்ளிதான் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள்.

தலைவர், போராட்டக்காரர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், சட்ட வல்லுநர், கல்வித் தந்தை, முக்கியவத்துவம் வாய்ந்திருக்கக்கூடிய தலைசிறந்த நிர்வாகி தொடக்க காலத்தில் இசைமுரசு நாகூர் ஹனிபாவுடன் சேர்ந்து ஒரு மேடையில் பாடலும் பாடி இருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் நடித்த நாடகத்தில் ஒரு திருமணக் காட்சியிலும் அவர் நடித்து இருக்கிறார். இன்றும் நமது ஆசிரியர் எழுதிவரும் வாழ்வியல் களஞ்சியத்தைப் படித்தால் அவர் மருத்துவம் படித்தவரோ என்று சந்தேகம் வரும் வகையில் நமக்குத் தோன்றும்.

- இப்படி அனைத்து விதமான திறமைகளையும் கொண்ட ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே  நம்முடைய ஆசிரியர் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். இந்த பல்கலைக் கழகம்தான் தமிழினத்தின் விடிவெள்ளியாக 90 ஆண்டுகள் ஒளிவீசிக் கொண்டு இருக்கிறது,  ஒளிவீசப் போகிறது, இன்னும் தொடர்ந்து வீசிக்கொண்டேதான் இருக்கப் போகிறது. 1945-ஆம் ஆண்டு திருவாரூரில் தலைவர் கலைஞர் அவர்கள் தென் மண்டல திராவிட மாணவர் முன்னேற்றக் கழக மாநாட்டுக்கு ஆசிரியர் அவர்களை அழைத்துச் சொற்பொழிவாற்ற வைத்திருக்கிறார். அவருக்கு தந்த தலைப்பு என்ன தெரியுமா? போர்க்களம் நோக்கி என்ற தலைப்பில் அப்போது உரையாற்றி இருக்கிறார்.

1945-ஆம் ஆண்டில் மட்டுமல்ல, இந்த 2022-ஆம் ஆண்டிலும் போர்க்களம் நோக்கிச் செல்வதற்குத் தயாராக இருப்பவர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை நாம் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கிறோம் ஆளுநருக்கு.  இத்தனை நாள் கழித்து ஆளுநர் அதற்கான ஒப்புதல் அளிக்காமல் இருப்பதைக் கண்டித்து நேற்றும் போர்க்களம் கொண்டிருக்கிறார். நாளை நமது பிறந்த நாளாச்சே! அது முடிந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கவில்லை. நான் கேள்விப்பட்டேன், தம்பி அன்பு அவர்கள், இரண்டு நாட்கள் ஆகட்டுமே பொறுத்து செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்.

டிசம்பர் 2 ஆம் தேதி அன்று கூட போராட்டம் நடத்துவேன். சிறையிலும் பிறந்தநாள் கொண்டாடத் தயார் என்று ஆசிரியர் அவர்கள் சொல்லி இருக்கிறார்.
மணக்கோலத்தில் இருக்கும்போதும் - மணவிழா நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்துப் பேசியபோதும், அண்ணன் வைகோ அவர்கள் குறிப்பிட்டதைப்போல, நாளை அறிவிக்கப்படும் போராட்டத்தில் நான் கலந்து கொள்ளத் தயார், மாமியார் வீட்டுக்குச் செல்ல நான் தயார் என்று சொன்னவர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

இதுதான் ஆசிரியர்! இதனால்தான் நமக்கெல்லாம் ஆசிரியராக இருக்கிறார். இந்த நேரத்தில் நான் அவருடைய துணைவியார், அவருடைய வாழ்விணையராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய மோகனா அம்மையாரை நான் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், உங்கள் அனைவரின் சார்பில் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். வாழ்க்கைத் துணைநலம் என்பதற்கு எடுத்துக்காட்டாக மோகனா அம்மையார் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்தளவுக்கு ஆசிரியர் அவர்களது தொண்டு இந்த தமிழ்ச் சமுதாயத்துக்குக் கிடைத்திருக்கிறது என்று சொன்னால், அதற்கு மோகனா அம்மையாரின் பங்கும் அதில் இடம்பெற்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆசிரியருக்கு இவரை பார்த்து திருமணம் நடத்தி வைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். எவ்வுளவு தீர்க்கதரிசி என்பதற்கு வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.

குடும்பம் குடும்பமாக இயக்கம் நடத்திய காரணத்தால் இது குடும்ப இயக்கம். குடும்பக் கொள்கை இயக்கம். குடும்பப் பாச உணர்வு கொண்டிருக்கக்கூடிய இயக்கம். கொள்கையும் லட்சியமும் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் பாசமும் அன்பும் இருப்பதால்தான், இந்த திராவிட இயக்கத்தின் அடிக்கட்டுமானத்தை யாராலும், எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. இனியும் முடியாது! திராவிட இயக்கம் என்பது ஒரு கட்சியல்ல. இது ஒரு கொள்கை உணர்வு! அந்தக் கொள்கை உணர்வு வளரும்! வளர்ந்து கொண்டே இருக்கும்! அந்த உணர்வை யாராலும் தடுத்திட முடியாது, அழித்திட முடியாது. இந்த உணர்வானது திராவிட இயக்கத்துக்குள் மட்டுமல்ல, அனைத்து இயக்கங்களுக்கு உள்ளேயும் ஊடுருவி விட்டது.

அதன் அடையாளமாகத்தான் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த விழாவிலே பங்கேற்று இங்கே அண்ணன் ஆசிரியர் அவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். சமூகநீதி - சுயமரியாதை - பகுத்தறிவு - பெண் விடுதலை - மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவம் - இன உரிமை - மொழிப்பற்று ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய திராவிடக் கொள்கையின் அடையாளமாக நம்முடைய ஆசிரியர் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அரசியல் களத்தில் வென்றெடுத்து, தமிழ்நாட்டு மக்களைத் தன்மானம் உள்ளவர்களாக - அனைத்து உரிமைகளையும் கொண்டவர்களாக ஆக்குவது மட்டுமல்ல, அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து தரக்கூடிய திராவிட மாடல் ஆட்சியைத்தான் இன்றைக்கு நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஒரு சிறுவனாய் இருந்து திராவிடக் கொள்கையைப் பேசிய காலத்தில், இந்தக் கொள்கையை நிறைவேற்றக்கூடிய திராவிட மாடல் ஆட்சியானது அமையும் என்று ஆசிரியர் அவர்கள் நினைத்திருப்பாரா என்று எனக்குத்  தெரியவில்லை. ஆனால், தனது கனவுகள் நிறைவேறி வரும் காலத்தையும் ஆசிரியர் அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், அதுதான் எனக்கு மகிழ்ச்சி. ஒரு சீர்திருத்த இயக்கம் அரசியல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப் பிடித்து, தான் பேசிய கொள்கைகளை நிறைவேற்றும், சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது இந்திய வரலாற்றில் திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை!
இத்தகைய பெருமைக்குரிய இயக்கத்தை வழிநடத்தும் ஆசிரியர் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன். ஏன், தமிழ்நாட்டு மக்களின் சார்பில், தமிழர்களின் சார்பில் நான் வாழ்த்துகிறேன். இன்று நம்முடைய தலைவர் கலைஞர் இருந்திருந்தால், 99 வயதில் இந்த மேடையில் உதயசூரியனாய் காட்சி அளித்திருப்பார். அப்படிப்பட்ட நிலையில், 90 வயது ஆசிரியரை 99 வயது கலைஞர் அவர்கள் நிச்சயம் பாராட்டி இருப்பார். இன்றைக்கு அவர் இல்லை. கலைஞரின் மகனான நான் அவரது சொல் எடுத்து ஆசிரியர் அவர்களை நான் வாழ்த்துகிறேன்... கலைஞரின் மகனான நான் அவரது சொல் எடுத்து ஆசிரியர் அவர்களை நான் வாழ்த்துகிறேன் இவ்வாறு கூறினார்.


Tags : CM. K. Stalin , “The Dravidian Movement is not a party; It is a sense of principle; No one can destroy this' - Chief Minister M.K.Stal's speech
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...