×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிச.4ம் தேதி 30 இணைகளுக்கு திருமணம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் வருகின்ற 04.12.2022 அன்று திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள 30 இணைகளுக்கான திருமண விழா முன்னேற்பாடு பணிகளை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் பார்வையிட்ட பின். அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நிர்வாக ரீதியாக இருக்கின்ற 20 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு  வறுமை கோட்டிற்கு கீழுள்ள 25 மணமக்களுக்கு அந்தந்த பகுதி திருக்கோயில்கள் சார்பில் திருமணம் நடத்தப்படும் என மானிய கோரிக்கை அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில் வருகின்ற 04.12.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 30 இணைகளுக்கு திருமணம் நடைபெற இருக்கின்றது.

அன்றைய தினம் தமிழகம் முழுவதும் 220 திருமணங்கள் நடைபெற இருக்கின்றது. இந்து சமய அறநிலைய துறையை பொறுத்த அளவில்  கடந்த இரண்டு நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தையும் செயல்பாட்டிற்கு கொண்டுவந்து,  நிறைவேற்றிட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மாதந்தோறும் சீராய்வுக் கூட்டம் நடத்தி பணிகளின் முன்னேற்றம் குறித்து  ஆய்வு செய்வதோடு, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல்,  திருக்கோவிலுக்கு வரவேண்டிய வாடகை நிலுவையை வசூலித்தல், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுத்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். திமுக தலைமையிலான  ஆட்சி ஏற்பட்ட பின் இதுவரையில் சுமார் 240 கோடி ரூபாய் வாடகை வசூலும், ஆக்கிரமிப்பிலிருந்து சுமார் 3800 கோடி ரூபாய் சொத்துகளும் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன் ஒரே நாளில் திண்டுக்கல்லில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள180 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தளபதி அவர்கள் தலைமையிலே அமைந்திருக்கின்ற ஆட்சியில் தமிழக காவல்துறையின் பெரும் முயற்சியால் இதுவரையில் 286  சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருக்கின்ற கடத்தப்பட்ட 62 சிலைகள் கண்டறியப்பட்டு அவற்றை மீட்பதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமான சிலைகளை மீட்டதோடு,  கடத்தப்பட்டு வெளிநாடுகளிலுள்ள சிலைகளை கண்டறிந்து அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை  அதிகம் மேற்கொண்டது  நமது முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையில் அமைந்துள்ள காவல்துறை தான். இதில் தமிழக காவல்துறை இயக்குநரும்,  சிலை கடத்தல் பிரிவும் முனைப்பாக செயல்பட்டு ஒட்டுமொத்த ஒன்றிய அளவிலே இருக்கின்ற மாநிலங்களில் சிலை கடத்தல் தடுப்பை தடுக்கின்ற, அதிகம் மீட்கின்ற முதன்மை மாநிலமாக, தமிழ்நாடு திகழ்கிறது என்பதை தெரிந்தும் தெரியாதது போல் பாஜக தலைவர் அவர்கள் குற்றம் சாட்டுவது வியப்பாக உள்ளது.

இது அவரது அறியாமையை காட்டுகிறது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, காவல்துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க திருக்கோயிலிலும், திருக்கோயில் ஒட்டியுள்ள பிரகாரங்களிலும் 210 இடங்களில் சிசிடிவி காமிரா பொருத்துகின்ற பணியின் போது துவாரபாலகர் சிற்பத்தின் முகத்திலே காமிராவை பொருத்தியது குறித்து  எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் அதை சரி செய்து,  அதுவும் சமூக வலைதளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகி இருக்கின்றது. உண்மையில் அந்த நிகழ்வு கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு. தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குண்டான பணிகளை மேற்கொண்டு இருக்கின்றோம். இந்த சமய அறநிலையத்துறையின் சட்ட விதிகள் என்ன சொல்லுகிறதோ அதன்படி தான் துறை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசின் சீரிய வழிகாட்டுதலின்படி எங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளை மீறி செயல்படுகிறது என்றால் தாராளமாக நீதிமன்றத்தை நாடலாம்.

அதற்குண்டான பதிலை துறையின் சார்பில் அளிப்பதற்கு தயாராக இருக்கின்றோம். தமிழக முதலமைச்சர் வெளிப்படை தன்மையோடு தவறுக்கு இடம் தராமல் பக்த கோடிகளுக்கு தேவையான வசதிகளை அடிப்படை வசதிகளை மேம்படுத்த சொல்லி உத்தரவிட்டு இருக்கின்றார், அந்தப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம். தவறுகளை சுட்டிக்காட்டினால் அதை திருத்திக்கொள்ளவும் இந்த அரசு தயாராக இருக்கின்றது. அதைத்தான் முதலமைச்சர் விமர்சனங்களை நாங்கள் எதிர்கொள்வதற்கும், விமர்சனங்களை தாங்கிக் கொள்வதற்கும் தயாராக இருக்கின்றோம் அந்த விமர்சனங்கள் விஷமத்தனமாக இருக்கக் கூடாது என்று கடந்த வாரம் திருச்சி மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது கூறியிருக்கின்றார். அந்த வகையில் குறைகள் எதுவாக இருந்தாலும் சுட்டிக்காட்டினால் அதை சரி செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை பொறுத்தவரை விஐபிகள் தரிசனத்தை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட பாஸ்களின் எண்ணிக்கையில்  20 சதவீதத்தை இந்தாண்டு குறைத்திருக்கிறோம்.

தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, பார்க்கிங் வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர்  மற்றும் கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதிகள் போன்ற அனைத்து வசதிகளையும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறோம். எந்த முறையும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதனை சமாளிப்பதற்கு போதிய ஏற்பாடுகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களும், நானும் ஒருங்கிணைந்து இப்பணிகளை கண்காணித்து வருகின்றோம். திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களை தங்க கட்டிகளாக மாற்றி முதலீடு செய்வதைப் பொறுத்தளவில் 2008 ஆம் ஆண்டிலேயே நடைமுறையில் இருந்தது.

கடந்த ஆட்சி காலத்தில் பத்தாண்டுகளாக அந்தப் பணிகள் நடைபெறவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துறையின் ஆய்வின்போது இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு உத்தரவிட்டதை தொடர்ந்து இப்பணிகளை கண்காணிக்க 3  ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து கணக்கீடு செய்து, தங்க நகைகளை உருக்கின்ற பணியினை தொடங்கினோம். நீதிமன்றத்திலும் இதற்கு தடை விதிக்க மறுத்து, அறங்காவலர் குழுவை நியமித்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.  முதல் கட்டமாக பரம்பரை அறங்காவலர்கள் இருக்கின்ற பெரியபாளையம், இருக்கன்குடி ஆகிய கோயில்களின் நகைகள் உருக்கப்பட்டு, தங்க கட்டிகளாக வைப்பு நிதியில் வைக்கப்பட்டு அதன் மூலம் ஆண்டுதோறும் வட்டி கிடைக்கப்பெற்று அத்திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கு செலவிடப்படுகிறது. அதேபோல திருவேற்காடு, மாங்காடு கோயில்களின் பயன்படாத நகைகள் உருக்குவதற்கு மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் 6 திருக்கோயில்களில் பயன்படாத நகைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த திட்டத்தை  சிலர் எதிர்க்கிறார்கள், அவதூறு கற்பிக்கிறார்கள், விஷமத்தை பரப்புகிறார்கள் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை விடுவதற்கு இந்து சமய அறநிலையத் துறையும் தமிழ்நாடு அரசும் தயாராக இல்லை. திருக்கோயில்களில் ஆடை கட்டுப்பாடு விசயத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மக்களுடைய கருத்துக்களையும் கேட்டு நீதிமன்றம் சொல்கின்ற வழியில் செல்ல தயாராக இருக்கின்றோம். செல்போன்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்லக்கூடாது என ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிசாமி கோயிலிலும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல் கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆணையர் அவர்கள் உத்தரவிட்டிருக்கின்றார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அதிகளவில் வருகின்ற 519 திருக்கோயில்களிலும் செயல்படுத்தப்படும். இது குறித்து நீதிபதிகள் அறிவித்த தீர்ப்பானது நல்லதொரு.

வரவேற்க தகுந்த  தீர்ப்பு. இதை முழுமையாக இந்து சமய அறநிலைத்துறை பின்பற்றும். மாநிலத்தின் ஆளுநர் அவர்கள் திருவண்ணாமலைக்கு செல்லும் போது அவருக்குரிய புரோட்டகால்(protocol) படி  உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களைப் பொறுத்தளவில் இன்னார் இனியவர் என்ற பாகுபாடு பார்ப்பவர் இல்லை என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன், ந.திருமகள், சென்னை மண்டல இணை ஆணையர்கள் முனைவர் ந.தனபால், கே.ரேணுகாதேவி, துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,BM K. ,Stalin ,Minister ,Zegarbabu , Under the leadership of Chief Minister M. K. Stalin, 30 couples will be married on December 4: Minister Shekharbabu informed.
× RELATED தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள்...