ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நடமாடிய ஐயப்ப பக்தர்கள்: செல்பி, குரூப் போட்டோ எடுத்ததால் பரபரப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தின் மேல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் நடமாடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் பிரகார மேற்பகுதியில் கோயில் ஊழியர்கள் மற்றும் செக்யூரிட்டிகள் மட்டுமே செல்ல முடியும். மேற்பகுதிக்கு செல்வதற்கென்று பிரத்யேக வழிகள் உள்ளன. இந்த வழிகள் எப்போதும் பூட்டியே வைக்கப்பட்டிருக்கும். இதனால் குறிப்பிட்ட பணியாளர்கள் தவிர வேறு எவரும் செல்ல முடியாது. நேற்று காலை ராமநாத சுவாமி மூன்றாம் பிரகாரத்தின் மேல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் பலர் நடமாடியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயில் தீர்த்தங்களில் நீராடிய பக்தர்கள் தெற்கு கோபுர வாசல் வழியாக வெளியே வந்தனர். தீர்த்தமாடி திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பலர் தெற்கு கோபுர வாசல் அருகில் உள்ள நந்தவனம் பகுதியில் இருக்கும் படிகள் வழியாக ஏறி, மூன்றாம் பிரகாரம் மேல் தட்டோடு பகுதிக்கு சென்று ஈரத்துணிகளை காயப் போட்டுள்ளனர். மேலும் தட்டோடு பகுதியில் அங்குமிங்கும் நடந்து திரிந்ததுடன் மொபைலில் செல்பி எடுப்பது, குரூப் போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனைப் பார்த்த பக்தர்கள்  மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் எப்படி இவர்கள் சென்றார்கள் என விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories: