2024 தேர்தலில் யார் அதிபராக வேணும்? பிடனும் வேணாம்... டிரம்பும் வேணாம்: விரக்தியின் உச்சத்தில் அமெரிக்க மக்கள்

வாஷிங்டன்: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும் வேண்டாம்; தற்போதைய அதிபரும் தொடர வேண்டாம் என்று அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால், மூன்றாவதாக ஒருவர் அதிபராக வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கினார். இருவரில் ஜோ பிடன் வெற்றிப் பெற்றதால், அவர் (2024) வரை நாட்டின் அதிபராக செயல்படுவார்.

இந்த நிலையில் நாட்டின் அடுத்த அதிபராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விவாதம் அமெரிக்க மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ‘எகனாமிஸ்ட்-யூகவ்’ சார்பில் மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில், ‘தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் வேண்டாம். முன்னாள் அதிபர் டிரம்பும் வேண்டாம். கொரோனா தொற்று வேகமாக பரவிய போது அதிபர் தேர்தல் வந்ததால், டிரம்பை வெளியேற்றினோம். அதற்கு அடுத்து அதிபராக வந்த ஜோ பிடன் ஆட்சியிலும் அவ்வளவாக முன்னேற்றம் இல்லை. மக்கள் நோயால் பாதிக்கப்பட்டும், மிகவும் சோர்வாகவும் உள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் ெவகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் தெரிவித்துள்ளனர். மேலும் 80 வயதான ஜோ பிடன் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு 56% பேர், ‘ஏற்க மாட்டோம்’ என்றும், 76 வயதான டிரம்ப் அதிபர் பதவிக்கு போட்டியிட்டால் ஏற்பீர்களா? என்று கேட்டதற்கு 54% பேர், ‘அவர் மீண்டும் அதிபராக ஏற்க விருப்பமில்லை’ என்றும் கூறியுள்ளனர்.

இன்றைய நிலையில் மேற்கண்ட இருவரும் தான் அதிபர் பதவிக்கு போட்டியிட விரும்பம் தெரிவித்துள்ள நிலையில், மூன்றாவதாக அதிபர் பதவிக்கான விருப்ப பட்டியலில் குடியரசு கட்சியை சேர்ந்த ஆளுநர் ரான் டிசாண்டிஸ் உள்ளார். அவருக்கு 18% பேர் ஆதரவு அளித்துள்ளனர். 29% பேர் தங்களுக்கு விருப்பமான அதிபர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை அல்லது தெரியவில்லை’ என்று கூறியுள்ளனர்.

Related Stories: