×

தாம்பரத்தில் பரபரப்பு; பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த தில்லாலங்கடி பெண் கைது: நகை, பணத்துடன் உல்லாச வாழ்க்கை

தாம்பரம்: மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (50). அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி வேலம்மாள் (48), சானடோரியம் மெப்ஸ்சில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவர்களுக்கு நடராஜன் (25), சூர்யா (23) என்ற 2 மகன்கள். இவர்களில் மூத்த மகன் நடராஜன், சானடோரியம் பகுதியில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் டெலிவரிபாயாக வேலை செய்தார். அப்போது தாம்பரம்-முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு மாவு பொருட்கள் டெலிவரி செய்ய செல்லும்போது அபிநயா (எ) கயல்விழி (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலானது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அப்போது, அபிநயாவிடம், ‘மதுரையில் உள்ள உனது பெற்றோருக்கு தெரியப்படுத்த சம்மதம் வாங்கு’ என்று நடராஜன் கூறியுள்ளார். அதற்கு அபிநயா, ‘எனக்கு வயதான மாமாவை திருமணம் செய்து வைக்க பெற்றோர் வற்புறுத்தியதால் கோபத்தில் சென்னைக்கு வந்து விடுதி எடுத்து தங்கி வேலை செய்து வருகிறேன். அதனால் பெற்றோருடன் பேசுவதில்லை’ என்று கூறியுள்ளார். அதனால் தனது வீட்டின் அருகே ஒரு வீடு எடுத்து அபிநயாவை தங்க வைத்தார். பின்னர் தனது பெற்றோருக்கு அபிநயாவை அறிமுகம் செய்து வைத்தார் நடராஜன். மேடவாக்கம் அருகே ஒரு நகைக்கடையில் அபிநயா வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சானடோரியம் பகுதியில் உள்ள நகை கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

நடராஜனும் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நகைக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி நடராஜனுக்கும், அபிநயாவுக்கும் மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள  வேங்கடபெருமாள் பக்த பஜனை கோயிலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து பெற்றோருடன் கூட்டு குடும்பமாக அனைவரும் வசித்து வந்தனர். திருமணத்துக்கு பிறகு அபிநயா வேலைக்கு செல்லவில்லை. நடராஜன், காலையில் வேலைக்கு சென்றால் இரவு தான் வீடு திரும்புவார். அந்த நேரத்தில் அறையில் இருந்து வெளியே வராமல் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி காலை வழக்கம் போல நடராஜனின் தாய் வேலம்மாள் வேலைக்கு சென்று விட்டார். அப்போது, வீட்டிற்கு உறவினர்கள் வருவதாக தெரிவித்ததால் கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து கொடுத்து சமைக்கும்படி அபிநயாவிடம் கூறினார் நடராஜன். பின்னர், அறையில் தூங்கினார். அப்போது அபிநயா, தீபாவளிக்காக எடுத்த புடவைக்கு சட்டை தைக்க வேண்டும் என கூறி, கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடையில் துணிகளை கொடுத்து விட்டு வரும்படி நடராஜனை அனுப்பியுள்ளார். உடனே அவரும் சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பியபோது, பூட்டப்பட்டிருந்தது. சமையல் செய்வதற்காக பொருட்கள் வாங்க சென்றிருப்பார் என நினைத்து நடராஜன் காத்திருந்தார்.

நீண்ட நேரமாகியும் வராததால் வீட்டின் உள்ளே உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த விலை உயர்ந்த திருமண புடவை மற்றும் அபிநயாவின் புடவைகள், வேலம்மாளின் 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் மாயமானது தெரிந்தது. அதிர்ச்சியடைந்தார். உடனே அபிநயாவை செல்போனில் தொடர்பு கொண்டார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உடனே தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உதவி ஆணையர் சீனிவாசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அபிநயாவை தேடினர்.

செம்மஞ்சேரி அருகே உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அவரை பிடித்து தாம்பரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் தெரிய வந்த பல திடுக்கிடும் தகவல்கள் வருமாறு: அபிநயா (எ) கயல்விழி கடந்த 2011ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியை சேர்ந்த விஜய் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருடன் ஒரு மாதம் வாழ்ந்து விட்டு விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 2013ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (33) என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர் மூலம் அபிநயாவுக்கு 2015ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அடுத்த 4 மாதங்களில் அபிநயா மாயமானார்.

தேடியபோது, மதுரையில் செயினை அடமானம் வைத்து அவருடன் கம்ப்யூட்டர் வகுப்பு பயின்ற பிரபு என்பவருடன் ஒரு வாரம் உல்லாச பயணமாக கேரளா சென்றுள்ளார். அபிநயா மாயமானது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை டவுன் போலீசார் விசாரித்தனர். 10 நாட்களில் கண்டுபிடித்து கொடுத்தனர். 2018ல் மீண்டும் மாயமானார். மீண்டும் கண்டுபிடித்து போலீசார் கொடுத்தனர். பின்னர் குடும்பத்துடன் சிவகங்கையில் இருந்து மதுரைக்கு வந்து வீடு வாடகை எடுத்து வசித்து வந்துள்ளனர். அங்கு பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்தபோது, உதயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவருடன் மாயமானார். புகாரின் பேரில் திடீர் நகர் போலீசார் கண்டுபிடித்து கொடுத்தனர். அதற்கு பிறகு 2020ம் ஆண்டு மாயமானார். அப்போது கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து வாழ்ந்தார். 10 நாட்கள் மட்டுமே இருந்தார். பின்னர் மீண்டும் மாயமானார். கேளம்பாக்கம் போலீசார் அபிநயாவை கண்டுபிடித்து விசாரித்தபோது, கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் உடைய பன்னீர்செல்வம் போதையில் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி பிரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் நடராஜனை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமாகியுள்ளார். அந்த நகைகளை விற்பனை செய்து அமீனுக்கு செல்போன், வாட்ச் என பல்வேறு பொருட்களை வாங்கி தந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அமீன் வேலை விஷயமாக துபாய் சென்று விட்டதால் பின்னர் மீண்டும் 2வது கணவர் செந்தில்குமாருடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கேளம்பாக்கம் பகுதியில் ஏற்கனவே தங்கி இருந்த தனியார் பெண்கள் விடுதிக்கு வந்தபோது போலீசார் பிடித்தனர். மேலும் பல்வேறு நபர்களை காதலித்து திருமணம் செய்ய அபிநயா தனது ஆதார் அடையாள அட்டை மூலம் 32 சிம் கார்டுகள் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. அபிநயா, அவருக்கு உடந்தையாக இருந்த செந்தில்குமார் ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tambaram ,Dillalangadi , Excitement in Tambaram; Dillalangadi Woman Arrested for Cheating and Marrying Many Men: Lively with Jewels, Money
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!