×

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கத்தின் சார்பில் நெடுஞ்சாலைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் முறைகேடு என அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டுவது தவறு என்றும் இது தொடர்பாக நான் எந்தவித டெண்டரிலும் கலந்து கொள்ளவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமி மீது புகாரளித்ததாகவும் அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரைத் தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் அறப்போர் இயக்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ள வழக்கில் முகாந்தரம் இருப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறான கருத்துக்களையோ, உண்மைக்கு புறம்பான ஆதாரமில்லாத கருத்துக்களையோ தெரிவிக்கக்கூடாது என்று அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Edabadi Palanisamy , High Court prohibits Arapor Movement from speaking defamatoryly in Highway Department tender malpractice case
× RELATED தாம்பரத்தில் அதிமுக சார்பில் வரும் 5ம்...