×

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு ஒரே விதமான ஊதிய உயர்வு வழங்கிடுக: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு ஒரே விதமான ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு, தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, 2008 ஆம் ஆண்டு, உயர்திரு ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவினை நியமித்தார்.

உயர்மட்டக் குழு, இரண்டு விதமான ஊதிய விகிதம் நடைமுறையில் இருந்ததை மாற்றி, தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையான அனைவருக்கும் ஒரே விதமான ஊதியம் வழங்க வேண்டும் என்று  2011 ஆம் ஆண்டு ஒரு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை முடிவினை அண்ணா தி.மு.க. அரசாங்கம் கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போட்டுவிட்டது. சர்க்கரைத் தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கையினை ஏற்று, உயர்திரு ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் அவர்கள் பரிந்துரைத்த அறிக்கையினை மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Vigo ,Government of Tamil Nadu , Give equal pay hike to co-operative and public sector sugar mill employees: Vaigo demands Tamil Nadu government
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்