×

பண மோசடி வழக்கில் சிக்கிய பொன்னேரி ஆசாமி சர்வதேச குற்றவாளி: விசாரணையில் பகீர் தகவல்கள்

புதுச்சேரி: கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ஷேக் ஷவாளி (43). ஜெனரேட்டர் தொழிற்சாலை நடத்தி வரும் இவர் தனது முதலீடுகளை ெபருக்க  சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தபோது  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த மைக்கேல் இருதயராஜ் (59) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம், தான் ஒரு வழக்கறிஞர் என்று அறிமுகமானார். அப்போது முதலீடு தொகையாக ரூ.1 கோடி லோன் பெற்றுத் தருவதாகவும், அதற்கான கமிஷன் தொகையை எனக்கு தந்துவிட வேண்டுமென ஷேக் ஷவாளியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு ேபசினார்.

அதற்கு ஷேக் ஷவாளி சம்மதம் தெரிவிக்கவே அவரிடமிருந்து தொழிற்சாலைக்குரிய ஆவணங்கள் மற்றும் அவரது மகனது பாஸ்போர்ட், ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் ஆகியவற்றை மைக்கேல் இருதயராஜ் பெற்றுக் கொண்டார். சில தினங்களுக்குப் பிறகு இருவரும் புதுச்சேரியில் உள்ள ஓட்டலில் மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது ஷேக் ஷவாளியிடம் கமிஷன் தொகை ரூ.1.30 லட்சத்தை வாங்கிக் கொண்ட மைக்கேல் இருதயராஜ் பிற விபரங்கள் குறித்து தனது பணியாளர்கள் உடனே தங்களை சந்திப்பர் என்று கூறிவிட்டு அவரது விலையுயர்ந்த காரையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வெளியே சென்றார்.

அடுத்த சில நிமிடங்களில் ஷேக் ஷவாளியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் பணம் எடுக்கப்பட்ட குறுந்தகவல் வரவே அதிர்ச்சியடைந்த அவர் உடனே மைக்கேல் இருதயராஜ் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் என வந்ததோடு, எந்த பணியாளரும் அவரை சந்திக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஷேக் ஷவாளி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன்பேரில் விசாரித்த போலீசார் நுங்கம்பாக்கத்தில் பதுங்கியிருந்த மைக்கேல் இருதயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஜெயந்தி என்ற மச்சக்காந்தியையும்(50) கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே மைக்கேல் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி குறித்து தனிப்படை நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் அம்பலமானது. அதாவது புதுவையில் மோசடி வழக்கில் பிடிபட்ட மைக்கேல் மீது ஏற்கனவே தமிழகத்தில் 7 வழக்குகளும், மலேசியாவில் 6 வழக்கும், கர்நாடகாவில் 2 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மலேசிய நாட்டு குடியுரிமை பெற்ற இவர் சென்னை மட்டுமின்றி இந்தியாவில் போபால், ஐதராபாத், திரிபுரா உள்ளிட்ட பகுதிகளிலும் மாற்று பெயர்களில் குடியிருந்ததும் அம்பலமானது.

மேலும் மலேசியாவில் 2004ல் தான் இறந்துவிட்டதாக போலி நபரை காண்பித்து சான்றிதழ் பெற்று இந்தியாவில் குடியேறியதும் தெரியவந்தது., மேலும் தனது மகளை காதல்வலையில் வீழ்த்திய டிரைவரின் பெற்றோரை நூதனமாக ஏமாற்றி காரில் தனித்தனியாக அழைத்துவந்து டிரைவரின் தந்தையை செய்யூரில் கொன்று உடலை வீசிய வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதும் தெரியவந்தது. சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியின் பட்டியலில் மைக்கேல் உள்ளதும் தெரியவந்துள்ளது.

வயதுமூப்பு கருதி இவருக்கு புதுச்சேரி வழக்கில் நீதிமன்றம் நவ.7ம்தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில், சர்வதேச அளவிலான குற்றத்தன்மைகளின் நிலையை கருதி கடந்த 25ம்தேதி அதை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புதுச்ேசரி காலாப்பட்டு மத்திய சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டார். மைக்கேல் இறந்து விட்டதாக கருதியிருந்த மலேசியா காவல்துறையும், கோவை காவல்துறையை தொடர்பு கொண்டு அவர் உயிருடன் இருப்பதை உறுதிபடுத்தும் நடவடிக்கையில் கைரேகை உள்ளிட்ட தடயங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.


Tags : Ponneri Asami ,Bagheer , Ponneri Asami involved in money laundering case is an international criminal: Bagheer information in the investigation
× RELATED அதிமுகவை உடைப்போம் ஈடி ரெய்டு...