×

அரசு விதிமுறையின் படி வாகனத்தின் நம்பர் பிளேட்களில் அரசியல் தலைவர்களின் படமோ, நடிகர்களின் படமோ இடம் பெறக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நம்பர் பிளேட்டில் நடிகர்களின் படமோ, தலைவர்கள் படமோ, அல்லது அரசு விதிமுறைகளை மீறிய எழுத்துக்களோ இருந்தால் வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும், அதிகபட்ச அபராதமும் விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் சந்திரசேகர் என்பவர் ஒரு பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசின் சட்டத்தின்படி இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு நம்பர் பிளேட் வைப்பதற்கு உரிய உத்தரவு உள்ளது. அதில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி வாகன பதிவு எண் மட்டுமே இருக்க வேண்டும். அது தவிர்த்து வேறு எந்த புகைப்படமோ எழுத்துக்களோ இருக்க கூடாது என உத்தரவு உள்ளது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் நம்பர் பிளேட்களில் அவரவர் விரும்பும் அரசியல் கட்சி தலைவர், நடிகர், நடிகைகளின் படங்களை வைத்துள்ளனர்.

இதனால் விபத்துகள் ஏற்படும் போது உரிய நிவாரணம் பெறுதல் மற்றும் தகவல் தெரிவிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இது சட்டவிதிகளை மீறக்கூடிய செயல் ஆகும். எனவே இது குறித்து சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மனுதாரர் மனுவில் கோரிக்கை மட்டும் கொடுக்கவில்லை, மாறாக மிரட்டலும் விடுத்துள்ளார். குறிப்பாக மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில் தாங்களே உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை கண்டு நீதிபதிகள் கோபமடைந்தார்.

ஒரு கோரிக்கை வைத்து மனுதாக்கல் செய்யும் போது, இவ்வாறு மிரட்டும் தோணியில் மனுவில் கூறியிருப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். எனவே இந்த மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து மனுதாரர் தரப்பில் அந்த வரிகளையெல்லாம் நீக்கிவிடலாம் என கூறினார்.

அதற்கு நீதிபதிகள்; இவ்வாறு கூறுவது ஏற்புடையதல்ல, ஒரு கோரிக்கையின் போது இதுபோன்ற வரிகளை தவிர்ப்பது நல்லது என்று நீதிபதிகள் கூறினார். மேலும் தற்போது நம்பர் பிளேட்களில் அரசு விதிமுறைகளின் படி மட்டுமே நம்பர் பிளேட்கள் இருக்க வேண்டும். உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்தவேண்டும், போக்குவரத்து காவலர்கள், போக்குவரத்து வாகன அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு நம்பர் பிளேட்டில் நடிகர்களின் படமோ, தலைவர்கள் படமோ, அல்லது அரசு விதிமுறைகளை மீறிய எழுத்துக்களோ இருந்தால் அதனை உடனடியாக அகற்றவேண்டும்.

அதுபோன்ற வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதமும் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.


Tags : iCourt , According to the government regulation, the number plate of the vehicle, the picture of political leaders or the picture of actors should not be placed, the court branch order.
× RELATED ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி: புலனாய்வுக்குழு அமைக்க ஐகோர்ட் கிளை ஆணை