×

ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கி.ரா.மணிமண்டபத்தை காணொலியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: கோவில்பட்டி விழாவில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்கின்றனர்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கி.ரா. மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் இன்று திறந்து வைக்கிறார். விழாவில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்கின்றனர். கரிசல் இலக்கியத்தின் தந்தை,  சாகித்திய அகாடமி விருது பெற்ற  மறைந்த எழுத்தாளர் `கி.ரா’ என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள யூனியன் அலுவலக வளாகத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று (2ம் தேதி) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைக்கிறார். கோவில்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், நகராட்சி கமிஷனர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

கோவில்பட்டியில் விழா ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கி.ரா. மணிமண்டபத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் மணிமண்டபம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டு ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில்  அமைக்கப்பட்டு உள்ளது. மணிமண்டப வளாகத்தில் கி.ரா. திருவுருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நாளை (இன்று) 2ம் தேதி திறந்து வைக்கிறார். அதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் மணிமண்டபத்திற்கான பாதுகாப்பு குறித்த வசதிகள் அனைத்தும் செய்யப்படும். கி.ரா. பயன்படுத்திய பொருட்களை அவரது குடும்பத்தினர் வழங்கி உள்ளனர்.

கனிமொழி எம்பி, புதுச்சேரியில் இருந்து அத்தனை பொருட்களையும் வரவழைத்துள்ளார். அந்தப் பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. கி.ரா. எழுதிய அனைத்து புத்தகங்களும் நூலகத்தில் வைக்கப்படும். மற்றொரு அறையில் கி.ராவின் புத்தகங்கள் டிஜிட்டல் வடிவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.  தூத்துக்குடியில் நடைபெற்றதை  போன்று கோவில்பட்டியிலும் புத்தக திருவிழா  நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். ஆய்வின்போது கோட்டாட்சியர் மகாலட்சுமி, தாசில்தார் சுசீலா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags : CM ,Stalin ,Kira Mani Mandapam ,Kanimozhi ,Minister ,Geethajeevan , Kira Mani Mandapam inaugurated by Chief Minister M.K.Stalin, temple ceremony, Kanimozhi MP, Minister Geethajeevan
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...