×

திருமங்கலம் - தென்காசி 4 வழிச்சாலை பணியை விரைவுபடுத்துக: ஒன்றிய அரசுக்கு தென்காசி, மதுரை, விருதுநகர் மக்கள் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து தென்காசி வரையிலான 4 வழிசாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலையை கேரள மாநிலம் கொல்லம் வரைக்கும் நீட்டிக்க வேண்டும் என்றும் ராஜபாளையம் விருதுநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமங்கலம் முதல் தென்காசி வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் எண் 208-யை தற்போது 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தென்காசியில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணி நத்தை வேகத்தில் நடப்பதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பக தென்காசியில் இருந்து மதுரைக்கு செல்லவேண்டுமெனில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் அதிகபட்சமாக 6 மணி நேரம் வரை ஆகிறது என்பது மக்களின் வேதனை குரலாகும்.

திருமங்கலத்தில் இருந்து டிகுன்னத்தூர், சுப்புலாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக தென்காசிக்கு இந்த 4 வழி பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை பணி விரைந்து முடிக்கப்பட்டால் கனரக வாகங்கள் 4 சக்கர மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிக எளிதில் சாலையை கடந்து செல்வர். அத்துடன் உயிரிழப்பும் தடுக்கப்படும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

 4 வழிச்சலையை மதுரையில் இருந்து கொல்லம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. கொல்லம் வரை நீட்டிக்கும் பட்சத்தில் மதுரை விமான நிலையத்திற்கு கன்டெய்னர் போன்ற கனரக வாகனங்கள் எளிதாக சென்று வர உதவியாக இருக்கும். மதுரை-கொல்லம் தேசிய இருவழி நெடுஞ்சாலையில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 54 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

இந்த விபத்துகளில் 152 பேர் காயம் அடைந்துள்ளனர். 62 பேர் உயிரிழந்துள்ளனர். 4 வழிச்சாலை கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Tags : Thirumangalam - Tenkasi ,Thenkasi ,Madurai ,Virudhunagar ,Government of the Union , Speed up Tirumangalam-Thenkasi 4 lane work: People of Thenkasi, Madurai, Virudhunagar demand Union Govt.
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு