×

உடுமலையில் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த தகுதியற்ற லிப்ட் நடைபாலம்: ரூ.1.75 கோடி நிதி வீணடிப்பு: சமூக ஆர்வலர்கள் வேதனை

உடுமலை: உடுமலையில், கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.1.75 கோடியில் அமைக்கப்பட்ட லிப்ட் வசதியுடன் கூடிய நடைபாலம் பொதுமக்கள் பயன்படுத்த தகுதியற்றதாக உள்ளது. இதனால் ரூ.1.75 கோடி நிதி வீணடிக்கப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் குற்றம்சாட்டி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் 2வது தலைநகராக உடுமலை நகரம் உள்ளது. கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை இந்நகரத்தின் வழியாக செல்கிறது.

இதனால் தினசரி ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் உடுமலை நகரை கடந்து செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இங்கு வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் தினசரி பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும், வியாபாரிகளும் உடுமலை நகருக்கு வந்து செல்கின்றனர்.

அமராவதி, திருமூர்த்திமலை சுற்றுலா தலங்கள் உள்ளதால், வெளியூர்களில் இருந்தும் பயணிகள் ஏராளமானோர் உடுமலைக்கு சுற்றுலா வருகின்றனர். மேலும் உடுமலை வழியாக, கேரள மாநிலம் மூணாறுக்கும் சுற்றுலா செல்கின்றனர். வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீடான பழனி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் உடுமலை நகரை கடந்து செல்கின்றனர்.

இதனால் உடுமலை நகரில் பெரியகடைவீதி, பழனி சாலை, பொள்ளாச்சி சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மத்திய பேருந்து நிலையத்துக்கு வருபவர்கள், பழனி-பொள்ளாச்சி சாலையை கடந்து மறுபுறம் குடியிருப்புகளுக்கு செல்லவும், வர்த்தக பகுதிகளுக்கு செல்லவும் மிகவும் சிரமப்பட்டனர். போக்குவரத்து போலீசார் போதுமான அளவில் இல்லாததால்,  சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் சாலையை கடப்போர் விபத்துகளில் சிக்கும் நிலை நிலவியது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சாலையை கடக்கும் வகையில், இரும்பு நடைபாலம் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. கூடுதலாக, தமிழகத்திலேயே முதன்முறையாக லிப்ட் வசதியுடன் நடைபாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.1.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பல ஆண்டு இழுத்தடிப்புக்கு பின், லிப்ட் வசதியுடன் நடைபாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த அதிமுக ஆட்சியின் இறுதியில் திறக்கப்பட்டது. ஆனால் இந்த நடைபாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. காரணம், இதில் அமைக்கப்பட்ட லிப்ட் காட்சி பொருளாகத்தான் உள்ளது. பொது இடத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்டுக்கு ஆபரேட்டர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.

மேலும் பொதுமக்களே இயக்குவதற்கான வழிகாட்டுதலும் இல்லை. லிப்ட் இயங்காததால், உயரமான படிக்கட்டுகளில் ஏறி பாலத்தை கடந்து செல்ல யாரும் விரும்புவதில்லை. இதனால் இந்த நடைபாலம் மக்கள் பயன்படுத்த தகுதியற்று பயனின்றி கிடக்கிறது. இரவு நேரங்களில் ஆதரவற்றோரும், சமூக விரோதிகளும் தான் இப்பாலத்தை தங்குமிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து உடுமலை பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுமக்கள் வசதிக்காகத்தான் ரூ.1.75 கோடி செலவழித்து நடைபாலம் கட்டப்பட்டது. பாலம் மட்டும் அமைத்தால் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்காகவும், முதியோர், பெண்களின் வசதிக்காகவும் லிப்டும் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை லிப்ட் பயன்பாட்டுக்கு வரவில்லை. எதற்காக தேவையின்றி மக்கள் பணம் ரூ.1.75 கோடியை வீணடிக்க வேண்டும்? தமிழகத்திலேயே முதன்முறையாக லிப்ட் வசதியுடன் நடைபாலம் என பெருமையுடன் கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் கூறினர்.

இந்நிலையில் தற்போது அமைந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, நடைபாலத்தையும், லிப்ட்டையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags : AIADMK ,Udumalai , AIADMK government, lift footbridge unfit for use by people, waste of Rs 1.75 crore, social activists in agony
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...