×

ஆண்டிபட்டி பகுதி பூக்களை சந்தைப்படுத்த ெசன்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும்: அதிக வருவாய் ஈட்ட வழிவகை செய்ய வேண்டும்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் விற்பனை போக மீதமுள்ள பூக்களை சந்தைப்படுத்த சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூ விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு கன்னியப்பபிள்ளைபட்டி, கொப்பையம்பட்டி, கொத்தப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, சுந்தரராஜபுரம், சித்தார்பட்டி, தெப்பம்பட்டி, ஏத்தக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பூ விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு மல்லிகை பூ, செண்டு பூ, செவ்வந்தி, கோழிக்கொண்டை, அரளி, பிச்சி, சம்மங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மல்லிகை பூ சாகுபடி அதிகளவில் செய்து வருகின்றனர். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற மாதங்களில் அதிகளவு பூக்கள் வரத்து வரும். தண்ணீர் அதிகளவு தேவைப்படாத இந்த பூ விசாயத்தை விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலமும் செய்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி நகரில் சீனிவாச நகர் பகுதியில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. மாவட்டத்திலேயே ஆண்டிபட்டி பூ மார்கெட்டில் இருந்து அதிகளவு பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் பூக்களை விவசாயிகள் இந்த பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து தான் விற்பனை செய்வார்கள். இங்கு தினந்தோறும் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கிலோ வரை மல்லிகை பூ மட்டும் விற்பனைக்காக வரும். விசேச காலங்களில் 15 ஆயிரம் கிலோ வரை விற்பனைக்கு வரும். இதனை தவிர்த்து மற்ற ஒவ்வொரு பூக்களும் தினந்தோறும் 5 ஆயிரம் கிலோவிற்கு மேல் விற்பனைக்காக வரும்.

இந்த பூக்களை தேனி, பெரியகுளம், திண்டுக்கல், மதுரை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். வியாபாரிகள் கொள்முதல் செய்தது போக மீதமுள்ள பூக்களை திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் உள்ள வாசனை திரவிய தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. விசேஷக்காலங்களில் மல்லிகை பூக்களின் விலை சுமார் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கூட விற்பனை செய்யப்படும்.

ஆனால் விசேச இல்லாத காலங்களில் மல்லிகை பூக்களின் விலை 400 முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இதேபோல் கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை மற்றும் பல்வேறு பண்டிகை காலத்திலும் பூக்கள் அதிகளவு விற்பனை செய்யப்படும். ஆண்டிபட்டி பகுதியில் விளைவிக்கப்படும் பூக்களை மார்க்கெட்டில் இருந்து நிலக்கோட்டை பகுதியில் உள்ள செண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும். இங்கு விவசாயிகளிடம் இருந்து ஒரு விலைக்கு பூக்களை பெற்றுக் கொண்டு அதனை வாசனை திரவிய தொழிற்சாலையில் மறு விலைக்கு அனுப்பப்பட்டது. பூக்களை சென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுவதால் மதியம் 1 மணியுடம் மார்க்கெட்டில் இருந்து பூக்களை வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர். இதனால் மதியம் 1 மணிக்கு மேல் பறிக்கும் பூக்களை விவசாயிகள் மார்க்கெட்டிற்க்கு கொண்டு செல்ல முடியாமல் பூக்களை கீழே கொட்டும் நிலை ஏற்படுகிறது.

தொழிற்சாலையில் குறைந்த விலையில் பூக்களை கொள்முதல் செய்வதால் மல்லிகை விவசாயிகளுக்கு குறைந்த அளவே லாபம் கிடைக்கும். மேலும் ஒருசில நேரங்களில் பூக்களை பறிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு கூலி மற்றும் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு உள்ளிட்டவைகளால் நஷ்டமும் ஏற்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக ஆண்டிபட்டி பூமார்க்கெட்டில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மல்லிகைப்பூக்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சுபமுகூர்த்தம் அல்லாத நாட்களில் விவசாயிகள் தங்கள் பூக்களை நேரடியாக ெசன்ட் தொழிற்சாலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பூ விவசாயிகள் கூறுகையில், விசேச காலங்கள் வந்தால் மட்டுமே பூக்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். மற்ற காலங்களில் நஷ்டத்திற்கு தான் பூக்களை விற்பனை செய்து வருகிறோம். மழை மற்றும் பனிக்காலங்களில் பூக்களில் வரத்து குறைந்து விடும். வெயில் காலங்களில் வரத்து அதிகரிக்கும். பூக்கள் விலை போகாத நாட்களில், பூ பறிப்பவர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் பூக்களை பறிக்காமல் செடியிலேயே காயும் நிலையும் ஏற்படுகிறது. எனவே ஆண்டிபட்டி நகரில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்தால் நாங்கள் எந்த நேரமும் பூக்களை சந்தைபடுத்த முடியும். மார்க்கெட் வியாபாரிகள் கொடுக்கும் அதே விலைக்கே பூக்களை ெசன்ட் தொழிற்சாலையில் கொடுத்து அதிக வருவாய் ஈட்ட முடியும். எனவே ஆண்டிபட்டி நகரில் செண்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

பனிப்பொழிவால் பூக்கள் விலை உயர்வு
குறிப்பாக மார்கழி மாதத்தில் அதிக அளவு பனிப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இதனால் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 5 மணி முதலே பனிப்பொழிவு தொடங்க ஆரம்பித்துள்ளது. ஒரு சில நாட்களில் பகல் முழுவதும் பனிப்பொழிவு காணப்படுகிறது. அதிகமான பனிப்பொழிவால் பூக்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டுக்கு முன்பை விட குறைந்தளவு பூவே விற்பனைக்கு வருகிறது. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பூக்களின் வரத்து குறைந்து விலை உயர்ந்து காணப்படுகிறது. தற்போது கிலோ மல்லிகை பூ ரூ. 1300க்கும், பிச்சிப்பூ ரூ.600 க்கும், முல்லைப் பூ ரூ.600க்கும் செண்டு பூ ரூ.150க்கும், அரளிப்பூ ரூ.200க்கும், மரிக்கொழுந்து ரூ.200க்கும், வெள்ளை பிச்சி ரூ.800க்கும் பன்னீர் ரோஸ் ரூ.150 க்கும், சாதா ரோஸ் ரூ100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Antipatti region , Cent factory to market flowers, high revenue, flower farming
× RELATED ஆண்டிபட்டி பகுதியில் தென்மேற்கு...