வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் கூடுதல் பொறுப்புகளை சுமக்கும் சத்துணவு பணியாளர்கள்: காலி பணியிடங்கள் விரைந்து நிரப்ப கோரிக்கை

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை உட்பட தமிழகம் முழுவதும் கூடுதல் ெபாறுப்புகளை சுமக்கும் சத்துணவு பணியாளர்கள், விரக்தி மனப்பான்மையுடன் பணியாற்றும் நிைல ஏற்பட்டுள்ளது. எனவே காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏழ்மையின் காரணமாக கல்வி வாய்ப்பு கிடைத்தும் அதை பெற முடியாத சூழலில் தவிக்கும் அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த குழந்தைகளுக்காக காமராஜரால் மதிய உணவு திட்டம் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமலுக்கு வந்தது. இத்திட்டத்தை மேலும் மெருகேற்றி சத்தான உணவாக பள்ளிக்குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கும் திட்டமாக கடந்த 1982ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் அண்ணா பிறந்த நாள் அன்று அன்றைய முதல்வர் எம்ஜிஆர் நடைமுறைப்படுத்தினார்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திடவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துவதும், இடைநிற்றலை தவிர்ப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்தது. இத்திட்டத்துக்காக தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சத்துணவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இத்திட்டத்திற்காக மாநில அரசால் உணவூட்டு மானியங்கள், சமையலறை பழுதுபார்ப்பு பணிகள், புதிய சமையலறையுடன் கூடிய இருப்பறை கட்டிடங்கள் கட்டுதல், எரிவாயு இணைப்பு வழங்குதல், சத்துணவு மையங்களுக்கு தேவையான சமையல் உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றுக்காக அவ்வபோது நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசால் தேசிய திட்டம், கண்காணிப்பு, மேலாண்மை மற்றும் மதிப்பீடுகள் திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகள், திட்டத்தினை பொதுமக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக விளம்பரங்கள் மேற்கொள்ளுதல், சத்துணவு பணியாளர்களுக்கு அவ்வப்போது புத்தாக்க பயிற்சிகள் வழங்குதல் ஆகிய பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சத்துணவு மையங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான அலுவலர்களுக்கு ஆய்வுப்பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்துணவுத்திட்டத்திற்காக கிராம அளவிலான குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுக்குழு, வட்டார, கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சத்துணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் தற்போதைய நிலையில் 63 ஆயிரத்து 412 பள்ளி சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் தினமும் 46 லட்சம் பள்ளி மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். இதில் தற்போது மாநகராட்சிகளில் தமிழக முதல்வர் ஆரம்ப மற்றம் நடுநிலைப்பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனால் தாய்மார்கள் அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் சத்துணவுத்திட்டத்தின் கீழ் 41 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 35 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் 60 வயதிலும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் 58 வயதிலும் பணியில் இருந்து வயது முதிர்வினால் ஓய்வு பெறுகின்றனர்.

இதன் மூலம் காலி பணியிடங்களின் நிலையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய காலி பணியிடங்களால் ஒரு மையத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்கள் அருகில் உள்ள மையங்களையும் கவனிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட தமிழகத்தில், பள்ளிக்குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் சத்துணவு கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இப்பிரச்னையால் ஏற்படும் வேலைப்பளுவால், அவ்வப்போது ஊழியர்கள் மத்தியில் விரக்தி மனப்பான்மையும், சலிப்பும் ஏற்படுகிறது. மேலும் இதுதொடர்பாக அவ்வபோது பிடிஓ அலுவலகங்கள் உட்பட தொடர்புடைய அலுவலகங்களில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், விடுப்பு எடுத்துக் கொண்டு செல்வதும் அதிகரித்துள்ளது. இதனால் சத்துணவு தொடர்பான பணிகளை கவனிக்க முடியாமல் ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில் சத்துணவு மையங்களில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை விரைந்து செயல்படுத்தி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதே பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு மட்டுமின்றி, சத்துணவு பணியாளர் சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

உணவு வகை பட்டியல் விவரங்கள்

முதல் மற்றும் மூன்றாவது வாரம் திங்கள் வெஜிடேபிள் பிரியாணி மற்றும் மிளகு முட்டை, செவ்வாய் கொண்டைக்கடலை புலாவ் மற்றும் தக்காளி மசாலா முட்டை, புதன் தக்காளி சாதம் மற்றும் மிளகு முட்டை, வியாழன் சாம்பார் சாதம் மற்றும் சாதா முட்டை, வெள்ளி கறிவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம் மற்றும் உருளைக்கிழங்கு தக்காளி சேர்த்து வேகவைத்த முட்டை வழங்கப்படுகிறது. 2வது மற்றும் 4வது வாரம் : திங்கள் பிசிபேளாபாத் மற்றும்வெங்காயம், தக்காளி முட்டை மசாலா, செவ்வாய் மிக்சர்ட் மீல் மேக்கர் மற்றும் காய்கறிகள் சாதத்துடன் மிளகு முட்டை, புதன் புளிசாதம் மற்றும் தக்காளி மசாலா முட்டை, வியாழன் எலுமிச்சம் சாதம் மற்றும் மசாலா முட்டை, வெள்ளி சாம்பார் சாதம் மற்றும் வேகவைத்த முட்டை மற்றும் வறுத்த உருளைக்கிழங்கு ஆகியவை வழங்கப்படுகிறது.

சத்துணவு ஊழியர்கள் ஊதியம்

1982ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது, சத்துணவு அமைப்பாளர் சம்பளம் ரூ.150 ஆக இருந்தது. தற்போது ரூ.7,500 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்ததாக சமையலர் ஊதியம் ரூ.60 என்பது ரூ.7,300 ஆகவும், உதவியாளருக்கு ரூ.5,900 ஆகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பணி ஓய்வுபெறும் போது, அமைப்பாளர் ரூ.20 ஆயிரம் சம்பளம் பெறும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: