குவாரி, குட்கா நிறுவனங்களிடம் இருந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.87.90 கோடி லஞ்சம் பெற்றுள்ளர்: வருமான வரித்துறை தகவல்

சென்னை: குவாரி மற்றும் குட்கா நிறுவனங்களிடம் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.87.90 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக வங்கிக்கணக்குகள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில் வருமான வரித்துறை பதில் கூறியுள்ளது. குவாரிகளுக்கு முறைகேடாக அனுமதி கொடுத்து பல கோடி ரூபாய் சம்பாதித்தற்கான ஆவணங்களும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

 2017-ம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற  வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 2011-12 ஆண்டு முதல் 2018-19 -ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு ரூ.206.42 கோடி வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில் புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், 3 வங்கிக்கணக்குளை முடக்கியும் வருமானவரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

இதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு நீதிபதி அனிதா சுமந்த நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித்துறையின் வரிவசூல் அதிகாரி குமார் தீபக் ராஜ் என்பவர் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2011-12 முதல் 2018-19 ஆண்டு வரையிலான காலத்துக்கு உரிய வருமானவரியை செலுத்தும்படி உத்தரவு பிறப்பித்தும் வரி செலுத்ததால் சொத்துக்களும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முடக்கப்பட்ட ஒரு வங்கி கணக்கில் 2022-23ம் நிதியாண்டில் அரசு, 8 லட்சத்து 50 ஆயிரத்து 226 ரூபாயை செலுத்தியுள்ளதாகவும், அந்த கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக பணம் எடுத்துள்ளநிலையில், தொகுதி பணிகளுக்காக எந்த பணமும் எடுக்கவில்லைஏ என்று அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்த கடிதம் அனுப்பியும் அவர் செலுத்தவில்லை என்பதால் அவரது சொத்துக்களும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வரவசூலிக்க எந்த தடையும் இல்லை எனவும், விஜயபாஸ்கருக்கு விளக்கமளிக்க வாய்ப்பு கொடுத்து மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், சொத்துக்களை வேறுயாருக்கும் விற்பனை செய்வதை தடுப்பதற்கும், அரசின் வருவாய் நிலையை பாதுகாப்பதற்கும் சட்டத்திற்குட்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த முயற்சிப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வருமான வரித்துறையின் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் கோரப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை டிசம்பர் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories: