
சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான கே. முரளிதரன் (66) மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில்:
தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான கே. முரளிதரன் (66) நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
90கள் தொடங்கித் தமிழில் பல நல்ல கதையம்சமுள்ள வெற்றிப்படங்களைத் தயாரித்து - தனக்கெனவும் தமது நிறுவனத்துக்கெனவும் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட கே. முரளிதரன் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஆர்வத்துடன் செயல்பட்டார். மூத்த தயாரிப்பாளரான அவரது மறைவு திரையுலகுக்குப் பேரிழப்பு. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.