×

எய்ட்ஸ் விழிப்புணர்வில் தமிழகம் முதலிடம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வில், இந்தியாவின் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை எழும்பூரில் சுகாதாரத்துறை மற்றும் நலவாழ்வு மையத்தில் உலக எய்ட்ஸ் தினம் 2022 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களுக்கும், பணியாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்தியாவில் 0.24% பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 0.18% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு உதவி செய்ய, ஒரு அறக்கட்டளை உருவாக்கி, ரூ.5 கோடி வைப்பு நிதி வைத்து, அதன் மூலம் வரும் வட்டியில் பல எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், குழந்தைகளுக்கும் கல்வி மற்றும் ஊட்டச்சத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வங்கி கணக்கில் தற்பொழுது, ரூ.25 கோடி வைப்பு நிதியாக உயர்ந்துள்ளது. அதன் மூலம் ஆண்டுக்கு 1.04 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 2090 பரிசோதனை மையங்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 9 தனியார் மருத்துவ கல்லூரியில் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் உள்பட தமிழகத்தில் 64 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், 1.24 லட்சம் பேருக்கு சிகிச்சையும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது. 1.08 கோடி மதிப்பில் ராஜிவ்காந்தி மற்றும் ராஜாஜி மருத்துவமனைகளில் ரேடியோ அலைவரிசை அடையாள சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரத்தம் சேமிக்கும்போது, ரத்தத்தை முறைப்படுத்தி வழங்கவும், காலாவதியாகிய ரத்தத்தை பயன்படுத்தினால் அலாரம் ஒலிக்கும். அதனை தடுக்க இந்த கருவி பயன்பெற உள்ளது. இந்தியாவில் மாநில அரசு செயல்படுத்துவது முதல்முறையாக பரீட்சார்த்த முறையில் இரண்டு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மற்ற மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும். ரத்தம் தேவைப்படும் நோயாளிகள் மற்றும் ரத்த கொடையாளிகள் விவரம் பதிவிட மற்றும் சேமிக்க ஒரு புதிய செயலி துவங்கப்பட்டுள்ளது. நான் 63 முறை ரத்த கொடை வழங்கியுள்ளேன். ஆனால், அதை விட அதிகமாக வழங்கியிருப்பேன். இந்தியாவில் ரத்த கொடை வழங்குவதில் மேற்குவங்கம் மற்றும் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இந்தியாவின் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இலக்காக செயல்படுகிறது.     



Tags : Tamil Nadu ,Minister ,Ma. Subramanian , Tamil Nadu tops in AIDS awareness; Information from Minister M. Subramanian
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...