×

கோயம்பேடு மார்க்கெட்டை நவீனப்படுத்த சிஎம்டிஏ முடிவு கடை உரிமையாளர், வியாபாரிகளுடன் ஆலோசனை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டை சிஎம்டிஏ நிர்வாகம் நவீனப்படுத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து,கடை உரிமையாளர், வியாபாரிகளுடன் சிம்டிஏ நிர்வாகத்தினர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். சென்னை கோயம்பேடு காய்கறி, பழம், பூக்கள் மற்றும் உணவுதானியம் ஆகிய மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் அங்காடி நிர்வாக சார்பில் பலமுறை விழிப்புணர்வு செய்துவந்தனர். பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து சீல் வைத்ததுடன் அபராதம் விதித்து ஒரு வருடத்திற்கு கடை உரிமம் ரத்து செய்தனர். இதையடுத்து அனைத்து வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்துவிட்டு துணி பைகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில்,  அங்காடி நிர்வாக சார்பில், கோயம்பேடு காய்கறி, பழம், பூ மற்றும் உணவுதானிய மார்க்கெட்டை நவீனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள உரிமையாளர்களை அழைத்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம்  நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வியாபாரிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கடை உரிமையாளர்கள் மார்க்கெட்டை நவீனப்படுத்த ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அங்காடி நிர்வாக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி கூறுகையில், ‘‘கோயம்பேடு காய்கறி, பழம், பூக்கள் மற்றும் உணவுதானியம் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.  இதனை மீறி விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைத்து உரிமம் ஒரு வருடத்துக்கு ரத்து செய்யபடும் என்ற அறிவிப்பை அடுத்து, அனைத்து வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு துணி பைகளில் வியாபாரம் செய்து  முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். தற்போது கோயம்பேடு மார்க்கெட் அங்காடி வளாகத்தை நவீனப்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறோம். இதற்கு கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளில் உருவாகும் திடக்கழிவுகள், குப்பையை அதற்கென ஒரு கலனில் சேர்த்து வைக்கவேண்டும். இதனை தூய்மை பணியாளர்கள் எடுப்பதற்கு வசதியாக இருக்கும். இதனை பின்பற்றாமல், சாலைகளில் வீசக்கூடாது. இதனை மீறி சாலைகளில் குப்பையை வீசினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் மார்க்கெட்டை நவீனப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும்,’’ என்றார்.

Tags : CMDA ,Koyambedu , CMDA decision to modernize Koyambedu market in consultation with shop owners, traders
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்