வேளாண் பிரதிநிதிகளின் கருத்து தேவை என்றால் அங்கக வேளாண்மை கொள்கையை திருத்தம் செய்யலாம்; கலந்தாய்வு கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்

சென்னை: அங்கக வேளாண்மை கொள்கையில் வேளாண் பிரதிநிதிகளிடமிருந்து கருத்துகளை அறிந்து  தேவைப்படும் பட்சத்தில் திருத்தங்களை செய்து, ஒருவார காலத்திற்குள்  அங்கக வேளாண்மைக் கொள்கையை இறுதி செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தினார். கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழக அரசின் அங்கக வேளாண்மைக் கொள்கையை உருவாக்குதல் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடந்த முதல் கூட்டத்தில், பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் அங்கக வேளாண்மைக் கொள்கை குறிப்பாக சிக்கிம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் முறைகள் குறித்தும் ஆராய்ந்து ஒரு வரையறுக்கப்பட்ட கொள்கையை உருவாக்குவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், அங்கக வேளாண்மைக் கொள்கை குறித்து கூறினார். தலைமைச் செயலாளர், இந்த கொள்கையை 5 ஆண்டுக்குப் பின்னர் ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை செய்யலாம். இந்த அங்கக வேளாண்மை விவசாயிகளிடையே விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுத்த அறிவுறுத்தலாம், தற்போது அங்கக விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வெற்றி கதைகள் குறித்து ஒரு நூலாக வெளியிட ஆவன செய்திடலாம். பாரம்பரிய வேளாண் உத்திகளை ஆராய்ந்து அவற்றின் மேன்மைத்தன்மையை வேளாண் பெருங்குடி மக்களுக்கு உரிய பயிற்சி அளித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பரவலாக்குவதன் இன்றியமையாமையை வலியுறுத்தினார்.

வேளாண் விரிவாக்க மையங்களில் மேம்படுத்தப்பட்ட அங்கக விதைகளை விற்பனை செய்ய தனி விற்பனைப் பிரிவினை ஏற்படுத்துவது அவசியம். இந்த கொள்கையை, தொகுப்பு அடிப்படையில் விவசாயிகளின் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இதில், பல்வேறு கருத்துகளை வேளாண் பிரதிநிதிகளிடமிருந்து அறிந்து தேவைப்படும் பட்சத்தில் திருத்தங்களை செய்து ஒருவார காலத்திற்குள் அங்கக வேளாண்மை கொள்கையை இறுதி செய்ய வேண்டும். மேலும், அடுத்த வேளாண் -உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி அதனை அந்த அறிக்கையில் தெரிவிக்கும் விதமாக பணிகள் தொடங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

Related Stories: