×

அறிவுசார் மையம் அமைப்பதை எதிர்த்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை: மேட்டுப்பாளையத்தில் உயர்நிலை பள்ளி எதிரே அறிவுசார் மையம் அமைக்கப்படுவதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சியில் 1.87 கோடி ரூபாய் செலவில் மாணவர்களுக்கு பயன்படக் கூடிய அளவில் அறிவுசார் மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த கட்டிடத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள மணி நகர் நகராட்சி உயர்நிலை பள்ளி எதிரே அமைக்க நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உயர்நிலை பள்ளி அருகே அறிவுசார் மையம் அமைப்பதற்கு பதிலாக, வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வீரகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மாணவர்கள் படிப்பின் நலன் மற்றும் நீட் போன்ற போட்டி தேர்வில் தேர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அறிவுசார் மையம் அமைக்கப்படுகிறது. அதன் மூலம் பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும். இந்த மையத்தை சுற்றி மேல்நிலை பள்ளிகள் உள்ளன என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு மனுதாரருக்கு அபராதம் விதிக்க கூடிய வழக்காக உள்ளது.  மாணவர்கள் படிப்பின் நலன் கருதி அறிவுசார் மையம் கட்டுவதை எதிர்ப்பது ஏற்கத்தக்கதல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : ICourt , Case against establishment of intellectual center dismissed in ICourt
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு