×

வரி பாக்கியாக 20% வரியை கட்டாததால்தான் விஜயபாஸ்கரின் வங்கி கணக்கு முடக்கம்: ஐகோர்ட்டில் வருமான வரி துறை பதில் மனு

சென்னை: வரி பாக்கியில் 20 சதவீதத்தை செலுத்தாத தால்தான் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில்பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு விஜயபாஸ்கருக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி உள்ளது தெரிய வந்தது. அந்த வரியை வசூலிக்க, புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்கள், 3 வங்கிக் கணக்குகள்  முடக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை அதிகாரி குமார் தீபக் ராஜ் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாஸ் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில், வருமான வரி நிலுவையை செலுத்தும் படி உத்தரவு பிறப்பித்த போதும், வரி செலுத்தாததால் சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. முடக்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கில் 2022-23ம் நிதியாண்டில் அரசு, 8 லட்சத்து 50 ஆயிரத்து 226 ரூபாயை செலுத்தி உள்ளது. அந்த கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக பணம் எடுத்துள்ளார்.

தொகுதி பணிகளுக்காக எந்த பணமும் எடுக்கவில்லை.வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த அவரது  மேல்முறையீடு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்த கடிதம் அனுப்பியும் அவர் செலுத்தவில்லை. ஒரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த முயற்சிப்பதால் அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வருமான வரித்துறையின் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags : Vijayabaskar ,Tax ,ICourt , Vijayabaskar's bank account frozen for non-payment of 20% tax arrears: Income Tax Department's reply in ICourt
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...