×

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ‘லிப்ட்’டை பராமரிக்காத 2 இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்: அமைச்சர், அதிகாரிகள் சிக்கியதால் நடவடிக்கை பாய்ந்தது

சென்னை: அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மின்தூக்கிகளை(லிப்ட்) சரியாக பராமரிக்காத காரணத்தால் 2 இன்ஜினியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சை சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டிட அலுவலகம் திறப்பு விழாவிற்கு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க கடந்த 29ம் தேதி மருத்துவமனைக்கு சென்றார். அமைச்சருடன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி மற்றும் சிலர் உடன் சென்றுள்ளனர்.

மின் தூக்கியில் செல்லும்போது, மின்தூக்கியை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டது. இதை தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் டி.சசிந்தரன் மற்றும் உதவி பொறியாளர் வி.கலைவாணி ஆகிய இருவரும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர், இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு, விரிவான சுற்றறிக்கை ஒன்றினை அனைத்து மின் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.  அதில், மருத்துவமனைகளில் உள்ள மின்தூக்கிகள் மற்றும் இதர மின் சாதனங்கள் சரியாக இயங்குவதை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government ,Stanley Hospital , 2 engineers suspended for not maintaining 'lift' in Govt Stanley Hospital: Minister, officials got caught, action took place
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்