போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 1,241 பேருக்கு பணப்பலன்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்

சென்னை: போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 1,241 பேருக்கு பணப்பலன்களை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார். மாநகர் போக்குவரத்துக் கழகம் பல்லவன் இல்லத்தில், நேற்று  போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்த 22 விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன், இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்குரிய காசோலைகளை வழங்கினார். இதை தொடர்ந்து, ஏனைய 1,219 பணியாளர்களுக்கும் அந்தந்த போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் வாயிலாக காசோலைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை செயலாளர் கோபால், உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே 2020 முதல் மார்ச் 2021 வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,241 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.242.67 கோடி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, இன்று (நேற்று) தமிழகம் முழுவதும் உள்ள 1,241 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகம் மற்றும் அனைத்துப் பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனைகள் செய்ய நடமாடும் மருத்துவ வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த “மிஷன் சென்னை” என்ற திட்டத்தின் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

Related Stories: