ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் நல திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும்: அமைச்சர் கயல்விழி உத்தரவு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் நல திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கயல்விழி உத்தரவிட்டுள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள்  குறித்த ஆய்வு கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டவர்கள் குடியேறிய நிலை, சமுதாய கூடங்களின் பராமரிப்பு, ஈரோடு மாவட்டம், ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிற்பேட்டைகளில் தொழில் துவங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் தற்போதைய நிலை மற்றும் காலியிடங்களை ஒதுக்கீடு செய்தல், பள்ளிகள் மற்றும் விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் ஆகிய நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். கூட்டத்தில், இந்த பிரச்னைகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜவஹர், அரசு கூடுதல் செயலாளர் பழனிசாமி, ஆதிதிராவிடர் நல இயக்குநர் ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: