×

வீராங்கனை பிரியா நினைவாக 6 மாநிலங்கள் பங்கேற்கும் மகளிர் கால்பந்து போட்டி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மகளிர் கால்பந்தாட்ட போட்டி முன்னேற்பாடுகளை நேற்று பார்வையிட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 15வது நிகழ்ச்சியாக, மறைந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா நினைவாக, வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கும் மகளிர் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.

இதை வரும் 3ம் தேதி காலை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். 4ம் தேதி மாலை நிறைவு விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரிசுக்கோப்பை வழங்க உள்ளார். போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாவட்டங்களின் முன்னணி கால்பந்து குழுக்களும், சென்னையை சேர்ந்த 6 கால்பந்து குழுக்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த குழுக்கள் உள்பட 18 கால்பந்தாட்ட குழுக்கள் பங்கேற்கின்றன. போட்டிகளில் கலந்து கொள்ளும் 300 வீராங்கனைகளுக்கும் இளைஞர் அணி லோகோ மற்றும் நினைவில் வாழும் விளையாட்டு வீராங்கனை பிரியாவின் உருவம் பதித்த ஜெர்ஸி ஆடைகள் வழங்கப்படுகின்றன.

ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் குமார் முன்னிலையில் பகுதி திமுக செயலாளர்கள் சுதாகர், வேலு, வட்ட செயலாளர் ஆர்.பாபு, பகுதி துணைச் செயலாளரும் மாநில கால்பந்தாட்ட வீரருமான டி.வி.வேலு மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.  இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு  கால்பந்து  விளையாட்டு வீராங்கனை பிரியா நினைவாக, அவருடைய எண்ணங்களை ஈடேற்றும் வகையில் ஒரு உந்து சக்தியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் அமையும்.

Tags : Minister ,PK Shekharbabu , 6 states will participate in women's football tournament in memory of player Priya: Minister PK Shekharbabu informs
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...