நடிகர் ராஜ்கிரன் வளர்ப்பு மகள் முசிறி காவல் நிலையத்தில் ஆஜர்

முசிறி: முசிறி காவல் நிலையத்தில் நடிகர் ராஜ்கிரன் வளர்ப்பு மகள் கணவருடன் நேற்று ஆஜரானார். திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி பத்மஜோதி(47). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பத்மஜோதி, கணவரை பிரிந்து மகள் பிரியாவுடன் சென்னைக்கு சென்றார். அப்போது நடிகர் ராஜ்கிரணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்தனர். இதையடுத்து, பத்மஜோதி என்கிற பெயரை கதீஜா ராஜ்கிரண் என்றும், மகள் பிரியாவின் பெயரை ஜனத்பிரியா(30) என்றும் மாற்றிக்கொண்டனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஜனத்பிரியா சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜா(34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து ஜனத்பிரியா, தனது தந்தை இளங்கோவன் கொடுத்த நகைகளை தாயிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக கதீஜா ராஜ்கிரண், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில் கணவர் ராஜ்கிரன் மீது அவதூறாக பேசியதோடு, குடும்ப நகையை எடுத்து சென்றதால் பிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். தற்போது பிரியா, கணவருடன் துறையூரில் தந்தை வீட்டில் வசித்து வருவதால், முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. இதற்காக ஜனத்பிரியா, கணவர் முனீஸ்ராஜாவுடன் முசிறி காவல் நிலையத்தில் நேற்று  ஆஜராகி விளக்கம் அளித்தார். கதீஜா ராஜ்கிரண் ஆஜராகவில்லை. தொடர்ந்து, இருதரப்பையும் இன்று (2ம்தேதி) நேரில் ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: