×

முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டது ஏன்?.. ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கம்..!

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆர்.கே., நகர் தொகுதி இடைத்தேர்தல் கடந்த 2017ம் ஆண்டு நடந்தபோது,  வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி தரவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்த வரியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து  விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த வங்கி கணக்குகளில்தான் தனது எம்எல்ஏவுக்கான சம்பளத்தையும், அரசு நிதிகளை பெறுகிறேன். அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை. அதனால், வங்கி கணக்கை முடக்கம் செய்த வருமானவரி துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்  என்று கோரியுள்ளார். இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி அனிதா சுமந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது  இந்த மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது; வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி விஜயபாஸ்கருக்கு கடிதம் அனுப்பியும் அதனை செலுத்தவில்லை. மேலும், சொத்துக்களை விற்பதை தடுப்பதற்காக அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ள வங்கி கணக்குகளில் அரசு நிதி எதும் வரவில்லை என்றும் அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை என்றும் வருமான வரித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு விஜயபாஸ்கர் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Vijayabaskar , Former AIADMK minister Vijaya Bhaskar's bank accounts and assets were frozen why?.. Income Tax department explanation in ICourt..!
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு