×

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றில் மணலை மூட்டை கட்டி நூதன முறையில் கடத்தல்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வேலூர்: வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்று மணலை மூட்டை மூட்டையாக கட்டி பைக்குகளில் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் பாலாற்றிலிருந்து இரவு, பகல் நேரங்களில் மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வந்தது. அதிகாரிகளின் கடும் நடவடிக்கை காரணமாக மணல் கடத்தல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் வாகனங்களில் மணல் கடத்தினால் அதிகாரிகளிடம் சிக்கி விடுவோம் எனக்கருதி நூதன முறையில் மணல் கடத்தல் சமீப காலமாக நடக்கிறது.

அதாவது மூட்டைகளில் மணல் நிரப்பி இருசக்கர வாகனங்களில் கடத்தப்படுகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பாலாற்று பாலத்துக்கு அருகிலேயே மூட்டை மூட்டையாக மணல் அள்ளினர். பின்னர் அவற்றை பைக்குகளில் ஏற்றி கடத்தி செல்கின்றனர். இந்த மணல் மூட்டைகள் ₹200 முதல் ₹300 வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பாலாற்று பாலத்தின் அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டு பாலத்தின் உறுதிதன்மைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மழைவெள்ளம் வந்தால், பாலம் உடையும் அபாயம் உள்ளதாக பலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பாலாற்று பாலத்தில் இருந்து பார்த்தாலே பட்டப்பகலில் மணல் கடத்தப்படுவது தெரிகிறது. ஆனால் இதை போலீசாரும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. குறிப்பாக வேலூர் புதிய பஸ் நிலையம், சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம், பெருமுகை போன்ற இடங்களில் 24 மணி நேரமும் மணல் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

ஆனால் போலீசார் பெயரளவிற்கு மட்டுமே ஒரு சிலரை கைது செய்கின்றனர். எனவே நீராதாரம் பாதிக்கும் வகையில், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணல் கடத்தலை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறையினரும் இணைந்து பாலாற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Sandy ,Vellore New Bus Station ,Hyundai Bundle , Trafficking of sand in bales near Vellore New Bus Stand: Citizens demand action
× RELATED உம்மன் சாண்டிக்கு எதிரான சரிதா...