குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்

காந்திநகர்: குஜராத் மாநிலம் ஜாம்பூரில் வசிக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கென முதன் முறையாக அவர்களது கிராமத்திலேயே பிரத்யேக பூத் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள ஜாம்பூரில் ஆப்பிரிக்க பூர்வகுடிகளான சித்தி பழங்குடியின மக்கள் சுமார் 5,000 பேர் வசிக்கின்றனர். தெள்ளத்தெளிவாக குஜராத்தி மொழி பேசும் அம்மக்கள் இந்திய குடிமக்களாக முறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அவர்கள் தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வாக்களிக்கின்றனர். அந்த சமூகத்தை சேர்ந்த ரகுமான் என்பவர் 3-வது முறையாக தனித்து போட்டியிடுகிறார். இந்நிலையில் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த அவர்கள் சொந்த கிராமத்தில் வாக்களிக்க ஏதுவாக முதன் முறையாக வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள கிராம மக்கள் தங்களது முதல் வாக்கு பதிவை பண்டிகை போன்று கொண்டாடி, விதவிதமான உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

அரபு படையெடுப்பு நடந்த 7-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வணிகர்களாகவும், படகு ஓட்டிகளாகவும் ஆப்பிரிக்காவை சேர்ந்த சிலர் புலம் பெயர்ந்தனர். அதுமுதல் அவர்கள் இந்தியாவில் வசித்து வரும் நிலையில் குஜராத்தில் உள்ள ஜாம்பூர் கிராமம் அவர்களது புகழிடமாக மாறி இருக்கிறது. சித்தி பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: