அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் அழைப்பு

டெல்லி: அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் அழைப்பு விடுத்தார். ஜல்லிக்கட்டு காளையானது 6 வயது வரை போட்டிகளில் பங்கேற்கும், காளைகளை தங்களது குடும்ப உறவு போன்று வளர்ப்பது தமிழர்களின் வழக்கம் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

2017ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விதிமுறைகள் குறித்தும், ஜல்லிக்கட்டு போட்டி எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் தமிழக அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விகளை பொறுத்தவரை ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் 15 மீட்டர் தூரம் மட்டுமே ஓட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. காளைகள் எப்படி 15 மீட்டர் தூரம் மட்டும் ஓட முடியும்? வீரர்கள் அனைவரும் காளையை தொட அனுமதி உள்ளதா? ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற 15 சதுர மீட்டர் இடம் போதுமானதா?     காளைகள் வெளியேற ஒதுக்கப்பட்ட 100 மீட்டர் தூரத்தில் காளைகள் எப்படி ஓடி வெளியேறுகின்றன?  உள்ளிட்ட கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டியின்போது தகுதியுடைய ஒரு வீரர் மட்டுமே ஒரு நேரத்தில் காளையை தொட முடியும் எனவும் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியின் பங்கேற்கும் வீரர்கள் அவரவரின் இடங்களில் தான் நிற்க வேண்டும் என்றும் காளைகள் வெளியேறும் பாதையை அடைக்க அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

இதையடுத்து நீதிபதி ராய் கூறுகையில், ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வந்த பின் எங்களையும் ஜல்லிக்கட்டு பார்க்க அழைக்க வேண்டும் என கூறினார். அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கண்டிப்பாக உங்களை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அழைப்போம் என தெரிவித்தார்.

Related Stories: