×

ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் சா.மு.நாசர் திட்டவட்டம்

பெரம்பூர்: தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு கிடையாது என்று அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திட்டவட்டமாக கூறினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காமராஜ் நகர் அங்கன்வாடி பள்ளி அருகே நடைபெற்றது. இதற்கு கொளத்தூர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் தனசேகர் தலைமை வகித்தார். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு முன்னிலை வகித்தார்.

இதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் பேசியதாவது; திமுக இளைஞரணியை எப்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்து வலுப்படுத்தினாரோ அதேபோல் தற்போது உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியை ஒருங்கிணைத்து அடுத்த தலைமுறையை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் ஆங்காங்கே இருக்கும் இளைஞர்களை ஒழுங்குப்படுத்தி கொள்கை பிடிப்புடன் ஒருங்கிணைத்து வருகிறார். அவருக்கு நாம் முழு உறுதுணையாக இருக்க வேண்டும்.தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை.

தினமும் 26 லட்சம் லிட்டர் பால்தான் கடந்த அதிமுக ஆட்சியில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் 28 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆவினில் பச்சை பால் பாக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது. மக்களுக்கு தேவையான அளவு பாக்கெட் பால் விநியோகம் செய்யப்படுகிறது. ஆரஞ்ச் நிற பாக்கெட் விற்பனை குறையவில்லை. மக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் பாக்கெட்டுக்கள் கிடைக்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

விழாவில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், கலாநிதி வீராசாமி எம்பி, திருவிக.நகர் மண்டல குழு தலைவர் சரிதா, கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Minister ,Nassar , There is no shortage of milk: Minister S. M. Nasser's scheme
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...