×

கீழ்ப்பாக்கத்தில் குடிநீர், கழிவுநீரின் தரத்தை அறிய புதிய பரிசோதனை கூடம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் குடிநீர், கழிவுநீரின் தரத்தை அறிய புதிய பரிசோதனை கூடம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் கீழ்ப்பாக்கத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில்  குடிநீர் மற்றும் கழிவுநீரின் தரத்தை நவீன முறையில் பரிசோதிக்க புதிய பரிசோதனை செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், தரமான குடிநீர் வழங்குதல் மற்றும் பாதுகாப்பான முறையில் கழிவுநீரகற்றும் பணிகளை மேற்கொள்வதோடு, குடிநீரின் தரத்தினை பரிசோதிப்பதை ஒருங்கிணைந்த பணியாக மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல்  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் கிணறுகள், ஆழ்துளை நீர் போன்ற நீராதாரங்களை ஆய்வு செய்வதற்கு தர உறுதி பிரிவு  இயங்கி வருகிறது.  சென்னையில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் வகையில் தினந்தோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகள், வணிக பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தும் குடிநீர், வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை நீரின் தரத்தை பரிசோதிக்க தனிநபர் பயன்பாட்டுக்கு ரூ.75, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக பயன்பாட்டுக்கு ரூ.200, கிணறுகள் மற்றும் ஆழ்துளை நீர் ஆய்வுக்கு ரூ.200 கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை கூடத்தில், குடிநீரின் தரத்தை நவீன முறையில் பரிசோதிக்கவும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் தரத்தை பரிசோதிக்கவும் தனித்தனியே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.  மேலும், குடிநீர் மற்றும் கழிவுநீரில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றை பரிசோதிக்க தனித்தனியாக நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம், குடிநீர் தொடர்பான 23 பரிசோதனைகளும், கழிவுநீர் தொடர்பான 16 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகள், வணிக பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தும் குடிநீர், வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை நீரின் தரத்தை இந்த நவீன பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Kilpauk ,Chennai , New testing lab to check quality of drinking water and waste water in Kilpauk: Chennai Drinking Water Board Information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...