×

புதுச்சேரியில் 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கடற்கரை சாலையை திறக்க வேண்டும்: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை

புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலத்தில் சிறந்து விளங்குகிறது. ஆகையால் தினந்ேதாறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புதுச்சேரி என்றாலே கடற்கரை தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு புகழ்பெற்றது புதுச்சேரி கடற்கரை. மேலும், கடற்கரையை சுற்றி மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகியவை உள்ளன. இதனால் புதுச்சேரிக்கு வந்தாலே அனைவருக்கும் மன அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும்.

இந்நிலையில் சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடற்கரையில் செயற்கை மணற்பரப்பு, நடைபாதை, தூய்மையான சாலை வசதி, மின்விளக்கு வசதி, டூப்ளக் சிலையில் சிறிய பூங்கா ஆகியவற்றை அமைத்து மிக அழகாக மாற்றியுள்ளனர். இதனை பார்ப்பதற்கே உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

 மேலும், பொதுமக்கள் மற்றும் இங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் ஆகியோர் காலை, மாலை நேரங்களில் இயற்கை காற்றோட்டமாக நடைபயிற்சி செய்து உடல் ஆரோக்கியத்தை பேணி காத்து வருகின்றனர். கொரோனா காலத்திற்கு முன்பு, வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ரிக்‌ஷா, கார், பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கடற்கரை சாலை வழியாக சென்று கடலின் அழகை ரசித்துவிட்டு பிறகு மற்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிடுவது வழக்கம். இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிரமம் இல்லாமல் சுற்றிப் பார்த்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு தீவிரமாக எடுத்தது. அதற்காக பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவை மூடப்பட்டன. மேலும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வெளிமாநிலத்தவர் தீவிர பரிசோதனைக்கு பிறகே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

குறிப்பாக சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டதால் அப்போது வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனாவின் தீவிரம் வேகமாக பரவ தொடங்கியதால் புதுச்சேரி அரசு கடற்கரை சாலையின் இருபுறங்கள் மற்றும் குறுக்கு சாலை சந்திப்பு என அனைத்து வழிகளையும் பேரிகார்டுகள் கொண்டு நிரந்தரமாக மூடினர்.

இதனால் கொரோனா தொற்று குறைய தொடங்கிய பிறகும் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையின் அருகே சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.அன்று மூடப்பட்ட கடற்கரை சாலை கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே வைத்துள்ளனர். இதனால் கடற்கரைக்கு தனது வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை கடற்கரைக்கு முன் உள்ள சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதற்காக ஒவ்வொரு சாலைகளிலும் வாகனங்களின் பாதுகாப்பு பணிகளுக்காக போக்குவரத்து காவலர்களை பணிக்கு அமர்த்தி வருகின்றனர். புதுவையில் ஏற்கனவே காவலர்கள் பற்றாக்குறை இருக்கும் போது இதுபோன்று காவலர்களின் மேன் பவரை வீணாக்கி வருகின்றனர். எனவே புதுச்சேரி கடற்கரை சாலையை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து முத்தியால்பேட்டையை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் கூறுகையில், நாங்கள் 44 ஆண்டுகளாக இப்பகுதியில் விளையாடி வந்தோம். தற்போது உள்ளூர் மக்களையே உள்ளே விடாமல் பெரும் அட்டகாசம் செய்து வருகின்றனர். ராஜ்நிவாசில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வாக்கிங் செல்ல பைக்கில் சென்றால் கூட குற்றவாளிகளை பார்ப்பது போல் பார்க்கின்றனர். முத்தியால்பேட்டை, வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், சோலை நகர், வாழைக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளை தினந்தோறும் இந்த கடற்கரை சாலை வழியாக தான் அழைத்து சென்றோம். தற்போது இந்த சாலை மூடப்பட்டுள்ளதால் சுற்றி செல்லும் நிலை உள்ளது. மேலும், எங்கள் பகுதிகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை இந்த கடற்கரை சாலை வழியாக தான் விரைந்து வரும். ஆனால் தற்போது அவசர ஊர்திகள் அனைத்தும் 2 கி.மீ வரை சுற்றி வரும் நிலை உள்ளது. கடற்கரையோரம் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   

கடற்கரை சாலையில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்
கடற்கரை சாலையில் பேரிகார்டுகளை அகற்றி வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். 24 மணிநேரமும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். சிசிடிவி கேமராக்களை பொறுத்தி கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்க வேண்டும். அதில் யாராவது பைக்கில் வேகமாகசெல்வதோ, ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபடுவது தெரிந்தாலோ அவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 10 மணிவரையிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கலாம். ஆகவே இதற்கான நடவடிக்ககைளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பொதுமக்களின் நலன் கருதியே வாகனங்கள் செல்ல தடை
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையிடம் கேட்டதற்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் ஏதேனும் விபத்து ஏற்படாமல் தவிர்க்க வாகனங்களுக்கு தடைவிதித்து முன் பகுதியில் பார்க்கிங் வசதி செய்து தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுசம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்.

Tags : Puducherry , Puducherry, beach road, public, tourists request
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது