×

சுற்றுலா பயணிகளின் கவனம் ஈர்க்க கழிவுகள் இல்லாத ஏற்காடு உருவாக்க நடவடிக்கை

சேலம்: சுற்றுலாப் பயணிகளோடு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ‘கழிவுகள் இல்லாத ஏற்காடு’ உருவாக்க நடவடிக்கைகள் துரிதகதியில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் மலைகளின் இளவரசி என்றும், ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கப்படும் ஏற்காடு, தமிழகத்தின் கவனம் ஈர்க்கும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 5,326 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு 383 சதுர கிலோமீட்டர் பரப்பை கொண்டது. அடிவாரத்தில் இருந்து விண்ணை முட்டும் மரங்களை ரசித்தவவாறு, வளைந்து நெளிந்து செல்லும் 20 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்று ஏற்காட்டுக்கு செல்கின்றனர் சுற்றுலா பயணிகள். இப்படி செல்பவர்களுக்கு படகு இல்லம், அண்ணாபூங்கா, ரோஜாத்தோட்டம், மான்பூங்கா, வியூபாயின்ட், லேடீஸ் சீட், கிளியூர் கரடியூர் நீர்வீழ்ச்சி, சேர்வராயன் கோயில் என்று அனைத்து இடங்களும் கண்ணுக்கு விருந்தளிக்கிறது.

உள்ளூர் மட்டுமன்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு, ஏற்காட்டின் இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர். இப்படி வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. கலைநிகழ்ச்சிகளுடன் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஏற்காட்டின் மீதான சுற்றுலா பயணிகளின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு ஊக்கமளித்து மேலும் உற்சாகமூட்டும் வகையில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக கழிவுகள் இல்லாத ஏற்காடு என்ற இலக்கோடு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாளுக்கு நாள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் சுற்றுலாத்தலமாக ஏற்காடு மாறி வருகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு பல்வேறு பணிகள் இங்கு நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக முற்றிலும் தூய்மையான ஏற்காடு என்ற அடிப்படையில் முதற்கட்ட பணிகள் நடக்கிறது. ஏற்காட்டிலுள்ள உணவகங்களில் இருந்து வீசப்படும் கழிவுகள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்திவிட்டு வீசிச்செல்லும் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை மறுசுழற்சி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கழிவுகளை சேகரித்து பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் செயல்பட்டு வரும் பயோ மீத்தேன் கேஸ் பிளாஸ்டிக் மையத்தின் மூலம் மறுசுழற்சி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் குப்பைகளை முறையாக கையாளவும், சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி இங்குள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏற்காட்டில் அமைந்துள்ள பெரியஏரி, சின்னஏரி ஆகியவற்றின் கரையோரங்களில் சுற்றுலாப் பயணிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் அலங்கார ஏரியை தூய்மைப்படுத்தி அழகூட்டும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தத்தில் சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனம் ஈர்க்கும் கழிவுகள் இல்லாத  இடமாக ஏற்காட்டை மாற்றுவதற்கான பணிகள் அனைத்தும் துரிதகதியில் நடந்து வருகிறது.

இது தவிர, ஏற்காட்டில் தற்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் 8பணிகளும், மாவட்ட ஊராட்சி பொதுநிதியின் கீழ் 17பணிகளும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 50பணிகளும், 15வது மத்திய நிதிக்குழு (கிராம ஊராட்சி) சார்பில் 50பணிகளும், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளும் நடந்து வருகிறது. இந்த வகையில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 158 பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

நாளுக்கு நாள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் சுற்றுலாத்தலமாக ஏற்காடு மாறி வருகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு பல்வேறு பணிகள் இங்கு நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக முற்றிலும் தூய்மையான ஏற்காடு என்ற அடிப்படையில் முதற்கட்ட பணிகள் நடக்கிறது. ஏற்காட்டிலுள்ள உணவகங்களில் இருந்து வீசப்படும் கழிவுகள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்திவிட்டு வீசிச்செல்லும் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை மறுசுழற்சி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Yercaud , Tourists, zero waste Yercaud, action
× RELATED ஏற்காட்டில் பரபரப்பு போலி சான்றிதழ்...