×

திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்த நிர்வாகம் அனுமதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஜல்ஜீவன்  திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.560.30 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்திட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், மற்றும் விளாத்திகுளம் ஆகிய 6 பஞ்சாயத்து ஒன்றியங்களுக்குப்பட்ட 136 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 363 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு இக்கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசாணை எண் 166, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(குவ1) துறை, நாள் 23.11.2022ல் ரூ.560.30 கோடிக்கு நிருவாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் நாளொன்றுக்கு தலா நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் 16.57 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தாமிரபரணி நீர் ஆதாரத்தைக் கொண்டு, நீர் எடுப்பு கிணறு மூலம் நீர் எடுக்கப்பட்டு சேதுராமலிங்கபுரத்தில் நிறுவப்படவுள்ள நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3.05 இலட்சம் மக்கள் பயன்பெறுவதுடன் புதிதாக 92,407 எண்ணிக்கையிலான செயல்பாட்டுடன் நீடித்த நிலைப்பாடு கொண்ட குடிநீர்க்குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பஞ்சாயத்து ஒன்றியத்திற்குட்பட்ட செறுக்கனூர், தாடூர், எஸ்.அக்ராஹாரம், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் பஞ்சாயத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும், R.K.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட R.K.பேட்டை, வாங்கனூர், GCS கண்டிகை மற்றும் SVGபுரம் ஆகிய 9 பஞ்சாயத்துகளில் அடங்கிய 115 குடியிருப்பு பகுதிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கு தேவையான நீரை கொசஸ்தலையாற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு 6 உறிஞ்சு கிணறுகள் மூலம் நாள்தோறும் 2.76 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு இக்குடியிருப்புபகுதிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 0.42 இலட்சம் மக்கள் பயன்பெறுவதுடன் செயல்பாட்டுடன் நீடித்த நிலைப்பாடு கொண்ட புதிய 255 குடிநீர்க்குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டங்களுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.560.30 கோடியில், ஒன்றிய அரசின் பங்குத்தொகையாக ரூ.256.84 கோடியும், மாநில அரசின் பங்குத்தொகையாக ரூ.256.84 கோடியும் மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் சமுதாய பங்களிப்பு தொகையுடன் சேர்த்து செயல்படுத்திட நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நிருவாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Tiruvallur ,Thoothukudi , Government of Tamil Nadu issued an ordinance granting administrative permission to implement the new combined drinking water project at a cost of Rs 560 crore in Tiruvallur and Thoothukudi districts.
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...