சென்னை வழிப்பறி ஆசாமி சிவங்கையில் அதிரடி கைது

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம், முகப்பேரில் வழிப்பறியில் ஈடுபட்டு, சிவகங்கையில் பதுங்கி இருந்த  ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். சென்னை முகப்பேர் அம்பிகா தெருவை சேர்ந்தவர் கனிமொழி (47), யோகா பயிற்சி செய்வார். கடந்த 21ம் தேதி காலை யோகா பயிற்சியை முடித்துவிட்டு முகப்பேர் சீனிவாசன் தெரு வழியாக நடந்து வந்தபோது பைக்கில் வந்த இருவர் கனிமொழியிடம் சென்று முகவரி கேட்டுள்ளனர்.

அவர் முகவரி பற்றி விளக்கிக்கொண்டிருந்தபோது அந்த நபர்கள், திடீரென கனிமொழி அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்துள்ளனர். அவர் கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்கள், கனிமொழியை சரமாரியாக தாக்கி அவரது செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து கனிமொழி கொடுத்த புகாரின்படி, ஜெ.ெஜ. நகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். திருமங்கலம், ஜெ.ெஜ.நகர் பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை பிடிக்க திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன் உத்தரவிட்டார்.

இதன்படி, ஜெ.ஜெ. நகர் காவல்நிலைய ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஓட்டேரி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இரண்டு பேர் பைக்கில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டம் பகுதியில் பதுங்கியிருந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (32), திருகண்ணன் (45) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களில், ரமேஷ் பகல் முழுவதும் ஆட்டோ ஓட்டிக்கொண்டு அதிகாலையில் நடைபயிற்சி செல்கின்ற பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்துள்ளது தெரியவந்தது. ரமேஷ் மீது ஏற்கனவே திருமங்கலம், புழல், ஜெ.ெஜ. நகர் மற்றும் ரங்கம் ஆகிய காவல் நிலையங்களில் செயின் பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து 2 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: