தவறான சிகிச்சையால் கணவருக்கு கால் பறிபோனது புத்தூர் கட்டு வைத்திய சாலை உரிமையாளர் மீது பரபரப்பு புகார்: கமிஷனர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் மனு

சென்னை: தவறான சிகிச்சையால் கணவரின் கால் பறிபோனது. இதனால் சிகிச்சை அளித்த புத்தூர் கட்டு வைத்திய சாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்த வேளாங்கண்ணி (23), தனது கைக்குழந்தையுடன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் விஜய். ஒன்றரை வயதில் மகன் உள்ளான். வீட்டின் அருகே உள்ள பூங்காவில் கடந்த 4.9.2022 அன்று மகனை கணவர் விஜய் சறுக்கல் விளையாட அழைத்து சென்றார். தவறி விழுந்த மகனை, கணவர் பிடிக்க முயன்ற போது அவரது வலது கால் முட்டியின் மீது பலத்த அடிபட்டது. அவரது நண்பர் சிவா மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்த போது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிந்தது.

எலும்பு முறிவு சரியாக 3 மாதம் ஆகும் என்று மருத்துவமனையில் கூறியதால், கடந்த 5.9.2022 அன்று வடபழனி 100 அடி சாலையில் உள்ள புத்தூர் கட்டு வைத்திய சாலையில் காண்பித்தோம். 4 கட்டு போட்டால் சரியாகி விடும் என்றனர். அதன்படி ஒரு கட்டுக்கு ரூ.3,240 வாங்கினர். இரண்டு நாள் கழித்து கட்டு போட்ட பகுதியில் இருந்து ரத்த வடிய ஆரம்பித்தது. நான் வைத்திய சாலை உரிமையாளர் சிவசாமி வேலுமணியிடம் போன் மூலம் கூறினேன். அதற்கு அவர் மருந்துதான் இதுபோல் வடிகிறது என்றார்.

பிறகு கடந்த 16.9.2022 அன்று நேரில் சென்று காண்பித்த போது, கே.கே.நகரில் நாகத்தம்மன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சென்று சேர்க்கும் படி புத்தூர் கட்டு வைத்தியசாலை உரிமையாளர் சொன்னார். அங்கு சென்று கணவரை சேர்த்தேன். அங்கு எந்தவித சிகிச்சையும் செய்யவில்லை. பிறகு கணவரின் தாய் அம்சராணி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். கணவரின் காலை பாிசோரித்த டாக்டர்கள் காலை அகற்ற வேண்டும் என்று கூறினர். கடந்த 16.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் கணவரின் கால் எடுக்கப்பட்டது.

அதைதொடர்ந்து கணவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கால் தற்போது அகற்றப்பட்டுள்ளது என்று கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புத்தூர் கட்டு வைத்திய சாலை உரிமையாளர் மீது புகார் அளித்தேன். எனது புகாரை போலீசார் பெற்று கொண்டனர். பிறகு புத்தூர் கட்டு வைத்தியசாலை வடபழனி காவல் நிலைய எல்லையில் உள்ளதால் அங்கு சென்று புகார் அளிக்கும்படி கூறினர். எனவே கணவருக்கு தவறாக சிகிச்சை அளித்து காலை எடுக்க காரணமாக இருந்த புத்தூர் கட்டு வைத்தியசாலை உரிமையாளர் சிவசாமி வேலுமணி மீது உரிய நடவடிக்கை எடுத்து, உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: