×

உலகக் கால்பந்து போட்டியில் தங்கள் நாடு தோற்றதை கொண்டாடிய ஈரான் மக்கள்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தால் ஏற்பட்ட மனமாற்றம்

டெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக நடக்கும் போராட்டத்தில் 60 சிறுவர்கள் உட்பட 448 பேர் போலீசாரால் கொல்லப்பட்டுள்ள நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவிடம் தங்கள் நாட்டு அணி தோற்றதை வழக்கத்துக்கு மாறாக ஈரான் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருவது, உலகளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்லாமிய நாடான ஈரானில், பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம். இதை அந்நாட்டு பெண்கள் பின்பற்றுகிறார்களா? ஹிஜாப்பை முறைப்படி அணிகிறார்களா? என்பதை கண்காணிக்கவே தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் பொது இடங்களில் நின்று கண்காணித்து, ஹிஜாப் அணியாத மற்றும் விதிமுறைகளுக்கு மாறாக அதை அணிந்துள்ள பெண்களை கைது செய்வது, வழக்குப் பதிவு செய்வது,  தண்டனை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால், ஈரான் பெண்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில்தான், கடந்த செப்டம்பரில் மாஷா அமினி என்ற இளம்பெண், சரியாக ஹிஜாப் அணியாமல் பொது இடத்துக்கு வந்ததாக இந்த தனிப்படை போலீசால்  கைது செய்யப்பட்டார். அதை அவர் கடுமையாக எதிர்த்தார். இதனால், காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதை கண்டித்தும்,  ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும் ஈரான் பெண்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தை தொடங்கினர்.

செப்டம்பர் 16ம் தேதி இந்த போராட்டம் தொடங்கியது. நாளடைவில் நாடு முழுவதும் போராட்டம் பரவியதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு படைகள் திணறி வருகின்றன. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு, தடியடி போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில், கடந்த 2 மாதங்களில் மட்டுமே 448 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக, நார்வேயில் செயல்படும் மனித உரிமை குழு நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

ஈரான் மக்களின் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு உலகளவில் ஏராளமான பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  ஈரானில் ஆதரவு தெரிவித்த பிரபலங்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த போராட்டமும், ஆட்சிக்கு எதிரான எண்ணமும் அடித்தட்டு மக்கள் வரை பரவி இருக்கிறது. அவர்கள் தங்கள் அதிருப்தி, எதிர்ப்பை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி தோற்றதை, ஈரான் மக்கள் வழக்கத்துக்கு மாறாக பட்டாசுகள் வெடித்தும், கார் ஹார்ன்களை தொடர்ச்சியாக அடித்தும், சாலைகளில் நடனமாடியும், பாட்டுப் பாடியும் கொண்டாடியது  உலகளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரான் மக்கள் கால்பந்து பிரியர்கள்.  தங்கள் நாட்டு அணி வெற்றி பெறுவதை எப்போதுமே விரும்புவார்கள். தங்கள் அணியின் வெற்றியை வீதிகளுக்கு வந்து கொண்டாடுவார்கள். தோற்றால் பெரும் சோகத்தில் மூழ்குவார்கள். இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம்  அமெரிக்க அணியுடன் மோதிய ஈரான் அணி தோற்றது. இதனால், ஈரான் மக்கள் சோகத்தில் ஆழ்வார்கள் என்ற கருதப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக அவர்கள் சாலைகளுக்கு வந்து அந்த தோல்வியை உற்சாகமாக கொண்டாடினர்.

 ‘அடக்குமுறை ஈரான் அரசின் ஒரு அங்கமாகவே ஈரான் கால்பந்து அணியையும் நாங்கள் கருதுகிறோம்,’ என அவர்கள் கூறியுள்ளனர். ஈரானின் சனன்தஜ் நகரம், குர்தீஷ் பகுதி, கம்யரான், மாஷா அமினியின் சொந்த ஊரான சாக்கெஸ்  உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த கொண்டாட்டம் களை கட்டியது. ஈரான் அணிக்கு எதிராக அமெரிக்க அணி முதல் கோல் அடித்ததுமே, சாக்கெஸ் நகர மக்கள் பட்டாசு வெடிக்க தொடங்கி விட்டனர். இந்த கொண்டாட்டங்களின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Tags : Iranians ,World Cup , Football World Cup, Iranians celebrate defeat, hijab, protest
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது