×

நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, அமெரிக்கா: ஈரான், வேல்ஸ் வெளியேற்றம்

தோஹா: உலக கோப்பையின் நாக் அவுட் சுற்றுக்கு  இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் முன்னேறிய நிலையில், ஈரான் மற்றும் வேல்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. தோஹாவின்  அகமது பின் அலி அரங்கம் மற்றும் அல் துமாமா அரங்கில்  நேற்று நடந்த பி பிரிவின் கடைசி சுற்று லீக் ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு கட்டாயம் அடுத்த சுற்று வாய்ப்பு என்ற நிலை இருந்தது.

அகமது  அரங்கில் நடந்த ஆட்டத்தில்  கிரேட் பிரிட்டன் நாடுகளான வேல்ஸ் (19வது ரேங்க்) - இங்கிலாந்து (5வது ரேங்க்) அணிகள் மோதின. ஆரம்பம் முதலே முன்னாள் சாம்பியன் என்பதற்கு ஏற்ப  ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி வீரர்கள் வேகம் காட்டினர். அதனால் கேரத் பேல் தலைமையிலான வேல்ஸ் அணியினர் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்த, முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.

2வது பாதியில் வேல்ஸ் தற்காப்பு அரணை நொறுக்கிய இங்கிலாந்து வீரர்கள் கோல் பகுதியை முற்றுகையிட ஆரம்பித்தனர். அதன் பலனாக ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் வேல்ஸ் வீரர் செய்த தவறால் கிடைத்த ‘ஃபிரீ கிக்’ வாய்ப்பை  முன்கள வீரர் ராஷ்போர்ட் கோலாக மாற்றினார். அடுத்த நிமிடமே கேப்டன் ஹாரி தட்டித் தந்த பந்தை மற்றொரு முன்கள வீரர் பில் போடன் கோலாக மாற்ற, இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றது.

இடையிடையே வேல்ஸ்  வீரர்கள் மேற்கொண்ட கோல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. 68வது நிமிடத்தில் பதிலி வீரர் கெல்வின் பிலிப்ஸ் கடத்தி தந்த பந்தை  ராஷ்போர்ட் தனது 2வது கோலாக மாற்றினார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, பி பிரிவில் 7 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு டிரா) முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. வேல்ஸ் (1 புள்ளி) கடைசி இடம் பிடித்து தொடரில் இருந்து வெளியேறியது.

அமெரிக்கா அசத்தல்: பி பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஈரான் (20) - அமெரிக்கா (16) மோதின. 38வது நிமிடத்தில் சக வீரர்  செர்ஜினோ டெஸ்ட் தட்டித் தந்த பந்தை  மற்றொரு முன்கள வீரர் கிறிஸ்டியன் புலிசிச்  கோலாக்க, அமெரிக்கா முன்னிலை பெற்றது. கடைசி வரை இதே நிலை நீடிக்க, அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று பி பிரிவில் 5 புள்ளிகளுடன் (2 டிரா, 1 வெற்றி) 2வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. இந்த பிரிவில் ஈரான் (3 புள்ளி), கத்தார் (0) அணிகள் வெளியேற்றப்பட்டன.



Tags : England ,USA ,Iran ,Wales , Knockout, England, USA, Iran, Wales, Relegation
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்