சத்யபாமா பல்கலையில் ராகிங் எதிரொலி மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து கடும் மோதல்

சென்னை: செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கேன்டீனில் சாப்பிட சென்றபோது, முதலாமாண்டு மாணவர்களை, இரண்டாமாண்டு மாணவர்கள் ராகிங் செய்தனர். இதனால், இரு தரப்பினரும் பிரிந்து மோதிக் கொண்டதால், பல்கலையின் கேன்டீனே போர்க்களமாக காணப்பட்டது. சென்னை செம்மஞ்சேரியில் செயல்பட்டு வரும் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கேன்டீனில் கடந்த 29ம்தேதி முதலாமாண்டு மாணவர்கள் சாப்பிட சென்றனர். அப்போது, அங்கு ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டாமாண்டு மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்கள் சாப்பிட கேன்டீனுக்குள் செல்ல வழிவிடாமல் ராகிங் செய்துள்ளனர். இதனை தட்டி கேட்டபோது வாக்கு வாதம் ஏற்பட்டு இரண்டாமாண்டு மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்களை அடித்ததாக தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த முதலாமாண்டு மாணவர் தனது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்று, இரண்டாமாண்டு மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த ராகிங் காரணமாக பல்கலைக்கழக வளாகமே இரண்டு கோஷ்டிகளாக பிரிந்தது. ஒரு கட்டத்தில் இரு தரப்பு மாணவர்களும், மாறிமாறி தாக்கிக் கொண்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கடந்த 17ம்தேதி தான் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர் ஒருவரை கடத்தி ராகிங் செய்து அறையில் வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. அதை தங்கள் செல்வாக்கை வைத்து கல்லூரி நிர்வாகம் சரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த முறை பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்கள் அடித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: