×

குண்டர் சட்டத்தில் கைதானதை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு; டிக்டாக் வீடியோ பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி

சென்னை: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தொடர்ந்த வழக்கில் தற்போதைய நிலையில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா என்கிற சுப்புலட்சுமி. ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தவர். கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனலை ஆபாசமாக விமர்சித்து ரவுடி பேபி சூர்யா பதிவிட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில், ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கந்தர்ஷா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் கைதாகினர்.

பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.  இதையடுத்து, தன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. காழ்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும், தனது கோரிக்கையை அறிவுரைக் கழகம் உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.  

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி டீக்காராமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, பெண்களுக்கு எதிராக சுப்புலட்சுமி ஆபாசமாக பேசியுள்ளதாகவும், அந்த வீடியோக்களை பார்த்து நீதிபதிகள் முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்து நீதிபதிகளிடம் டிக்டாக் சூர்யாவின் காட்சிகளை காண்பித்தார். ஒரு சில காட்சிகளை மட்டுமே பார்த்த நீதிபதிகள், டிக்டாக் சூர்யாவின் பேச்சுகளை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வழக்கில் முகாந்திரம் உள்ளது.தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஆறு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Tags : Rowdy Baby Surya ,TikTok , Rowdy Baby Surya case cannot issue order challenging arrest under Gangster Act: Court refuses; The judges were shocked after seeing the TikTok video
× RELATED படப்பிடிப்பில் நடிகைகள் குடுமிபிடி சண்டை