×

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், கூடுதலாக விரிவுரையாளர்களை நியமிக்கவும், தொகுப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கீடுசெய்தல் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணை: 2,423 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த அனுமதியும், அதற்கான செலவினத்துக்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்ய காலதாமதமாகும் என்பதால், மாணவர்களின் நலன் கருதி இடைக்கால நடவடிக்கையாக 2022-2023ம் கல்வி ஆண்டில் அந்தந்த மண்டல இணை இயக்குநர் வழியாக கூடுதலாக 1895 கவுரவ விரிவுரையாளர்களை சுழற்சி 1ல் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணயிடங்களில் தற்காலிகமாக 11 மாதங்களுக்கு நியமிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 7198 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 5303 கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், மீதமுள்ள 1895 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கல்வி நலன் கருதி உடனடியாக 1895 கவுரவ விரிவுரையாள்ரகளை நியமனம் செய்ய வேண்டும் என்று கல்லூரிக் கல்விஇயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து, நிபந்தனைகளுடன் அடிப்படையில், அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி 1ல் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுடன், கூடுதலாக 1895 கவுரவ விரிவுரையாளர்களை 2022-2023ம் கல்வி ஆண்டில் நியமனம் செய்வதற்கு அனுமதியும், அவர்களுக்கான தொகுப்பூதியம் வழங்குவதற்கு ஓராண்டுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு ரூ. 34 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து 2022-2023ம் கல்வி ஆண்டில் மேற்கண்ட பணியிடங்களில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள 2423 கவுரவ விரிவுரையாளர்களுடன், தற்போது கூடுதலாக 1895 கவுரவ விரிவுரையாளர்களை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் தலைமையில், அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் பரிசீலித்து, வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தற்காலிகமாக பணியமர்த்த அனுமதியும், செலவினத்துக்கான நிதியும் ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவித்துள்ளார்.

Tags : Appointment of additional 1,895 honorary lecturers in government colleges: Ordinance issued
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...