×

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சி ஸ்வாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில்,பிறழ் சாட்சியாக மாறிய ஸ்வாதி, ஜகோர்ட் கிளை உத்தரவின்படி கடந்த 25ம் தேதி ஆஜராகி நீதிபதிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு, சரியான பதில் இல்லை. இதையடுத்து ஸ்வாதியை மீண்டும் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக ஸ்வாதியை, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.

அப்போது ஸ்வாதியை சாட்சி கூண்டில் ஏற்றி சத்திய பிரமாணம் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையை வீடியோவில் பதிவு செய்தனர். அப்போது, ‘‘கடந்த 25ம் தேதி இந்த நீதிமன்றம் உங்களிடம் சில கேள்விகளை கேட்டது. இதற்கான உங்களது பதிலில் திருப்தி இல்லை. இதற்காக உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 25ம் தேதி நீங்கள் கூறிய சாட்சியங்களின்படியே தற்போதும் இருக்கிறீர்களா? இல்லை வேறு எதுவும் தெரிவிக்கிறீர்களா?’’ என்றனர். இதற்கு ஸ்வாதி, ‘‘நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. யோசித்து தான் முடிவெடுத்துள்ளேன்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘உண்மை தகவல்களை மறைத்து ஸ்வாதி கடந்த 25ம் தேதி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். அவரது சாட்சியங்களை இந்த நீதிமன்றம் பதிவு செய்து கொள்கிறது. அவரிடம் போட்டுக் காட்டப்பட்ட வீடியோவில், அவர் உள்ளார் என்பது தெளிவாக தெரிந்தும், ‘அது நான் இல்லை’ என்கிறார். அவருக்கு உதவும்விதமாக ‘இந்த பெண் நீங்கள்தான்’ என்று நீதிமன்றம் கூறியது. அதன் பின்னரும், ‘அது நான் இல்லை’ என தொடர்ச்சியாக அவர் பதிலளித்துள்ளார். தனது புகைப்படத்தை பார்த்து, ‘அது யார் என்று தனக்கு தெரியாது’ என்கிறார். மாஜிஸ்திரேட் முன் அவர் அளித்த வாக்குமூலம் மற்றும் சாட்சியமும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவரது வாக்குமூலமும் மாறுபடுகிறது.

இதன்மூலம் அவர் விசாரணை நீதிமன்றத்திலும், இங்கும் தெரிவிப்பது பொய். அவருக்கு ஏதோ அழுத்தம் உள்ளது என நினைக்கிறோம். இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறியாமல் அவர் பொய்யான சாட்சி வழங்குகிறார். இந்த நீதிமன்றத்தில் ஸ்வாதி அளிக்கும் வாக்குமூலம் உண்மையானது அல்ல என்பதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு அவர் தரப்பில் விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. ஸ்வாதி ஏற்கனவே தவறான சாட்சியம் அளித்தது தொடர்பான வழக்கு நாமக்கல் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கை அங்கு திரும்ப பெற்றுக் கொண்டு, ஐகோர்ட் கிளைக்கு மாற்ற வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.


Tags : Swathi ,Gokulraj ,ICourt branch , Contempt of court action against false witness Swathi in Gokulraj murder case: ICourt Branch takes action
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...