குஜராத்தில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு பயத்தை காட்டிட்டாங்களே... எப்போதும் இல்லாத அளவுக்கு சொந்த ஊரை சுற்றி சுற்றி வந்த மோடி, அமித்ஷா; ராகுல், கெஜ்ரிவால் மெகா வியூகம் ; ஆட்டம் கண்ட 24 ஆண்டு ‘பாஜ மாடல்’

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன?...’ இந்த பாடல் வரிகளை நினைத்தால் குஜராத் தேர்தல்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த குஜராத், ‘பழம் நழுவி பாலில் விழுந்தது போல்...’ 1995ல் பாஜவுக்கு கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ‘குஜராத் மாடல்’ ஆட்சி நடந்து வருகிறது. இந்த 24 ஆண்டு கால குஜராத் மாடலை ‘மக்களின் ஒரு விரல் புரட்சி’யான ஜனநாயக தேர்தல், ஆட்டம் காண வைத்து உள்ளது. ‘தேர்தல்’ என்றாலே அரசியல் கட்சிகள் ஓராண்டுக்கு முன்பே ரகசிய வேலைகளை தொடங்கிவிடுவார்கள். ஒரு முறைக்கு மேல் தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலே, அரசியல் கட்சிகள் தேர்தலை தெம்பாக சந்திப்பார்கள்.

ஆனால், 24 ஆண்டுகள் ஆண்ட பாஜவுக்கு இந்த தேர்தலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி பயத்தை காட்டிவிட்டார்கள் என்றே கூறலாம். இதற்கு பாஜவின் தேர்தல் பிரசாரமே சாட்சி. எந்த மாநிலத்திற்கும், எந்த தேர்தலுக்கும், மோடி-அமித்ஷா இப்படி சுழன்று சுழன்று பிரசாரம் செய்ததில்லை. ஏன், 2001 முதல் 2014 வரை அவர் முதல்வராக இருந்த கால கட்டத்தில் கூட இந்த அளவுக்கு மோடி பிரசாரம் செய்ததில்லை. இதுதவிர, பாஜ ஆளும் முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள், தேசிய மற்றும் மாநில தலைவர்கள், நட்சத்திரங்கள் என ஒரு மிகப்பெரிய பட்டாளமே தெரு, தெருவாக பேரணி நடத்தியும், வீடு வீடாக தேடி சென்றும் மக்களிடம்  ஓட்டு கேட்டுள்ளனர்.

* மத, ஜாதி வாக்கு

குஜராத்தில் இந்துக்கள் 88.57% பேர், இஸ்லாமியர்கள் 9.67% பேர், கிறிஸ்தவர்கள் 0.52% பேர் மற்றும் பிற மதத்தினரும் உள்ளனர். ‘இந்துக்கள் கட்சி என்றால் பாஜதான்’ என்று பேசும் அக்கட்சியினர் தேர்தல் என்று வந்துவிட்டால், மத மற்றும் ஜாதி வாக்கு அரசியலை முன்னெடுக்கிறார்கள். இந்த முறை எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. ராகுல் நடைபயணத்தின் தாக்கம், கெஜ்ரிவாலின் அதிரடி வியூகம் என இரண்டும் பாஜவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உளவுத்துறையே ரகசிய அறிக்கை கொடுத்து உள்ளது. இதனால் அலறிபோன பாஜ புது ரூட்டை எடுத்து உள்ளது. அதுதான் மத, ஜாதி வாக்கு அரசியல்.

* பட்டிதார் ஓட்டுக்கள்

குஜராத்தில் பட்டிதார் சமூகம் அதிகம். ஆட்சியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சமூகம் இதுதான். கடந்த தேர்தலின்போது பட்டிதார் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னின்று நடத்தி பாஜ அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுத்த 29 வயது இளைஞரான ஹர்திக் பட்டேல் பிரசாரத்தால்  பாஜவுக்கு பல தொகுதிகளில் வாக்கு வங்கி சரிந்தது. இந்த முறை இதை விட கூடாது என்பதற்காக ‘ஆபரேஷன் தாமரை’ என்ற தூண்டில் மூலம் காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்த ஹர்திக் பட்டேலை பாஜ தூக்கி போட்டு, விரம்காம் என்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் கொடுத்துள்ளது. பட்டிதார் சமூகத்தை சேர்ந்த பூபேந்திர பட்டேலையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக பாஜ முன்னிறுத்தி இருக்கிறது. இதுபோன்று பல ஜாதி தலைவர்களை நம்பியே பாஜ இந்த முறை தேர்தலை சந்திக்கிறது.

* குழந்தை அரசியல்

குஜராத்தில் 13 தாழ்த்தப்பட்டோர் தொகுதியும், 27 பழங்குடியினர் தொகுதியும் உள்ளன. இந்த தொகுதிகளில் காங்கிரசே செல்வாக்காக உள்ளது. காங்கிரசும், ஆம் ஆத்மியும் விளிம்புநிலை மக்களின் வாக்குகளை பெற ஒவ்வொரு கிராமங்களாக சென்றன. இதை உணர்ந்த பிரதமர் மோடியும், அமித் ஷாவும், ‘கிராமத்தை நோக்கி பாஜ தலைவர்கள் செல்ல வேண்டும்’ என்று தெரிவித்தனர். பழங்குடியினருக்கு பாஜதான் ஆதரவு என்பதுபோல், அந்த கிராமங்களை நோக்கியே மோடியும் பேரணி நடத்தினார். அந்த சமூகத்தின் குழந்தைகளை அருகில் வைத்து கொஞ்சினார். ஆனால், ராகுல் இதை செய்தபோது, குழந்தையை வைத்து அரசியல் செய்கிறார் என்றார் மோடி. இதற்கான விடையை மக்களிடமே விட்டுவிடுவோம்.

* பாஜவின் ராஜதந்திரம்

‘பழங்குடியினருக்கு காங்கிரஸ் ஒன்றும் செய்ததில்லை. ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்முவை நாங்கள் நிற்க வைத்தபோது அவர்கள் ஆதரிக்கவில்லை’ என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஆனால் ஜனாதிபதி தேர்தலில், பாஜ ஆளாத மாநிலங்களான ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா ஆகிய முதல்வர்கள் ஆதரவு தேவை என்பதால், ஒடிசாவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநரான திரவுபதி முர்மு, பாஜ கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இது, அனைவரும் அறிந்த உண்மையே.

* எதிர்ப்பு, போராட்டம்

24 ஆண்டுகள் ஆட்சியின் மீது அதிருப்தி, மோடி என்ற பிம்பம், 6 ஆண்டுகளில் மூன்று முதல்வர்கள் மாற்றம், மோர்பி தொங்கு பால விபத்து, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, போதை பொருள் கடத்தல், கள்ளச்சாராய பலி, அரசு ஊழியர் தேர்வில் முறைகேடு, டாக்டர்கள், ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள், கிராம அதிகாரிகள் என அரசு துறையே அரசுக்கு எதிரான போராட்டம், மோசமான சாலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் என பல்வேறு பிரச்னைகள் மூலம் பாஜவுக்கு மக்கள் தோல்வி பயத்தை காட்டிவிட்டனர். இதனால், இரண்டே மாதங்களில் ரூ.2.2 லட்சம் கோடிக்கு புதிய திட்டங்களை குஜராத்துக்கு கொண்டு சென்று உள்ளது ஒன்றிய பாஜ அரசு.

* தலைவர்கள் மோதல்

இந்த பிரச்னைகளை மறைக்க மோடி சென்ற இடம் எல்லாம், ‘நாட்டை பிரிவினை செய்து காங்கிரஸ் அழித்துவிட்டது. தீவிரவாதத்தை ஆதரித்தது. காங்கிரசின் வாக்கு வங்கி தீவிரவாதம், ஆம் ஆத்மி ஊழல் கட்சி’ என்று குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர் கார்கே, ‘காங்கிரசை வசைபாடுவதை விட்டுவிட்டு, குஜராத்தில் மோசமான பாஜ ஆட்சியை பற்றி பேசுங்கள். மோடி பொய்யின் தலைவன்’ என்று விமர்சித்திருந்தார். கெஜ்ரிவாலோ, ‘மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் எங்கள் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்’ என்று கூறியிருந்தார்.

* யாருக்கு எதிர்காலம்

இந்த தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த நாட்டின் பாஜவின் அரசியலையே தலைகீழாக மாற்றிவிடும். இதனால், இந்த தேர்தலை பாஜ அதி முக்கியமாக பார்க்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் பாஜவின் எதிர்காலத்தை மாற்றியமைக்குமா? காங்கிரசுக்கு புத்துணர்ச்சி தருமா? ஆம் ஆத்மி வரலாற்றில் புது கணக்கு தொடங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். டிச. 8ல் வாக்குகள் மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளின் நாட்களும் எண்ணப்படும். - மாற்றம் ஒன்றே மாறாதது...

மக்கள் தொகை    6.5 கோடி

மொத்த தொகுதிகள்    182

வாக்காளர்கள் எண்ணிக்கை    4,90,89,765

ஆண் வாக்காளர்கள்    2,53,36,610

பெண் வாக்காளர்கள்    2,37,51,738

மூன்றாம் பாலினத்தவர்    1,417

முதல் முறை வாக்காளர்கள்    4,60,000

சரிந்தது பாஜ கோட்டை

ஆண்டு    பாஜ    காங்.   

2002    127    51

2007    117    59

2012    115    61   

2017    99    77

* குற்ற பின்னணி வேட்பாளர்கள் 330

*ஆம் ஆத்மி 61

* காங்கிரஸ் 60

* பாஜ 32

* கொலை, பலாத்காரம் வழக்குகள் 192

வேட்பாளர்களின் படிப்பு தகுதி

 பட்டதாரிகள்    449

பள்ளிக்கு செல்லாதவர்கள்    42

5ம் வகுப்பு வரை படித்தவர்கள்    85

5-12ம் வகுப்பு வரை படித்தவர்கள்    997

இதுதான் குஜராத் மாடல்

* அரசுப்பணியில் காலியிடங்கள் 5,00,000

* ஆசிரியர்கள் மட்டும் 28,000

* காங்கிரஸ் ஆட்சியில்(1995) ரூ.10,000 கோடி கடன்

* பாஜ ஆட்சியில் (2022) ரூ.4,60,000 கோடி கடன்

* 6 ஆண்டில் 3 முதல்வர்கள்

* கோடீஸ்வர வேட்பாளர்கள் 456

* பாஜவை சேர்ந்தவர்கள் 154

* காங்கிரசை சேர்ந்தவர்கள் 142

* ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் 68

* வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி

* அதிகபட்ச சொத்து பாஜ வேட்பார் ஜெயந்தி பட்டேல் ரூ.661 கோடி  

யார் யாருக்கு எவ்வளவு

தொகுதிகள்    182

பாஜ    117

காங்.    59

ஆம் ஆத்மி    4

மற்றவை    2

* திராவிட மாடலை பின்பற்றிய மோடி

‘திராவிட மாடலில் வாக்காளர்களை கவர இலவசங்களை கொடுக்கிறார்கள். இது, நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். சீரழிக்கும்’ என்றார் பிரதமர் மோடி. ஆனால், குஜராத்தில் பாஜ தேர்தல் வாக்குறுதியில், இலவச சிலிண்டர், சைக்கிள், ஸ்கூட்டர், சமையல் எண்ணெய், பருப்பு என வாரி வழங்கி உள்ளனர். இதேபோல், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி பெண்களுக்கு மாதம்  ரூ.1000, வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.3000, 300 யூனிட் இலவச மின்சாரம் என இலவசங்களை வாரி வழங்கி உள்ளனர். திரவிட மாடலை விமர்சித்த பிரதமர் மோடி, அவர்களின் கொள்கைகளை குஜராத் தேர்தலில் பின்பற்றி உள்ளார்.

* உள்ளே... வெளியே...

2017ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரசில் இருந்து பாஜவுக்கு தாவிய 19 எம்எல்ஏக்களுக்கு பாஜவில் எம்எல்ஏ சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 42 பாஜ சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால், அவர்களில் பலர் கட்சிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். அவ்வாறு போட்டியிட்ட 12 அதிருப்தி வேட்பாளர்களை 6 ஆண்டு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உள்ளது. இதேபோல், காங்கிரசிலும் பலருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இரு கட்சியிலும் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் பலர் உள்ளடி வேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். சிலர் கட்சி மாறி உள்ளனர். இதனால், பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளிலும் உள்ளே... வெளியே... விளையாட்டுதான் நடந்து வருகிறது.

* பெண்களுக்கு முன்னுரிமை இல்லை

குஜாரத்தில் இரண்டு கட்டமாக நடக்கும் தேர்தலில் மொத்தம் 1,621 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க கிட்டதட்ட 5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 2.4 கோடி பெண் வாக்காளர்கள். இவ்வளவு பெண் வாக்காளர்கள் இருந்தும், 1,621 வேட்பாளர்களில் 139 பேர் மட்டுமே பெண்கள். காங், பாஜ, ஆம் ஆத்மி சார்பில் 38 பெண்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். சுயேச்சையாக 56 பெண்கள் போட்டியிட உள்ளனர். முதற்கட்டமாக தேர்தல் நடக்க உள்ள 89 தொகுதிகளில் மொத்தம் 788 வேட்பாளார்கள் களத்தில் உள்ளனர். இதில், 719 ஆண்கள், 69 பெண்கள். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பும் மூன்று கட்சிகளும், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. 2017ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 1,828 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இதில், 126 பேர் மட்டுமே பெண்கள். இவர்களில் 104 பேர் டெபாசிட் இழந்தனர். 13 பேர் மட்டுமே சட்டப்பேரவைக்கு சென்றனர்.

* 7வது முறையாக பாஜ வெல்லும் கருத்து கணிப்பில் தகவல்

குஜராத்தில் தேர்தல் பிரசாரம் முடிந்து உள்ள நிலையில், ஆட்சியை மீண்டும் பிடிப்பது யார் என்பது குறித்து இந்தியா டிவி-மேட்ரைஸ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில், குஜராத்தில் பாஜ 7வது முறையாக வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவீதத்தைப் பொருத்தவரை, பாஜக 49.9 சதவீதமும், காங்கிரஸ் 39.1 சதவீதமும், ஆம் ஆத்மி கட்சி 7.5 சதவீதமும், மற்றவர்கள் 3.5 சதவீத வாக்குகளும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் போட்டா போட்டி

* பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் சமூக வலைதள வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களை கவர ஆன்லைன் பிரசாரத்தை தீவிரப்படுத்தின.

* காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வை விளம்பரப்

படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளன. மொத்த பதிவுகளில் யாத்திரை தொடர்பான பதிவு மட்டும் 75%.

* காங்கிரஸ் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவான பதிவுகள், குஜராத் தேர்தல் பிரசாரம் பற்றியவை.

* கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆம் ஆத்மியின் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமான பதிவுகள் குஜராத்தில் கட்சியின் செயல்பாடுகள் பற்றியது.

* பாஜ பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் 40 சதவீத பதிவுகள் குஜராத் தேர்தல் தொடர்பானவை.

* ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடக பதிவுகள், பாஜ மற்றும் காங்கிரஸ் இரண்டையும் விட முன்னணியில் இருந்தன.

* 100 லட்சியம்... 92 நிச்சயம்... - கெஜ்ரிவால் சபதம்

டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, குஜராத்தில் காலடி எடுத்து வைக்க கெஜ்ரிவால் துடித்து வருகிறார். இதற்காக மற்ற கட்சிகள் பிரசாரம் தொடங்கும் முன்பே, தனது வேலையை தொடங்கிவிட்டார் கெஜ்ரிவால். இதனால் அதிர்ந்து போன பாஜ மற்றும் காங்கிரஸ் தங்களது பிரசாரத்தை முன்னெடுத்தது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் பேசிய கெஜ்ரிவால், ‘100 தொகுதிகள் லட்சியம்... 92 நிச்சயம்...’ என்று உறுதியாக தெரிவித்து உள்ளார்.

Related Stories: