திருப்பதியில் அதிகாலை பரபரப்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மர்மநபர் தீ வைப்பு: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திருமலை: திருப்பதி ரயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மர்மநபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருமலா எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இதேபோன்று நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த ரயில் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அதில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது முன்பதிவு பெட்டியான எஸ்.6 பெட்டியில் உள்ள கழிவறையில் இருந்து திடீரென கரும்புகை அதிகளவில் வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டபடி அந்த ரயிலில் இருந்து அவசர அவசரமாக தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்கினர். சத்தம் கேட்ட அதே ரயிலின் பக்கத்து பெட்டிகளில் இருந்த பயணிகளும் இறங்கினர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். புகை வந்த கழிவறையை உடனடியாக திறந்து பார்த்தனர். அப்போது கழிவறை முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்துகொண்டிருந்தது. உடனடியாக  தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கழிவறையில் யாரோ ஒருவர்   குப்பைகளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதனால் குப்பைகள் எரிந்ததோடு கழிவறை முழுவதும் பற்றி எரிந்தது தெரிந்தது. ரயில் புறப்படுவதற்கு முன்பு கவனிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட நேரத்தில் ரயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: