×

‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன் ஜி-20 தலைமையை நாளை இந்தியா ஏற்கிறது: நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்கள் ஜொலிக்கும்

டெல்லி: ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன் நாளை ஜி-20 தலைமையை இந்தியா ஏற்கிறது. அதற்காக நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்களை ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தோனேசியாவில் நடந்த ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி, அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (டிச. 1) அதிகாரபூர்வ முறைப்படி ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது.

இதற்காக நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்களை ‘ஜி-20 லோகோ’வால் ஒளிரச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக நாடு முழுவதும் 50 நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன. முதன் முதலாக ஜி-20 ‘ஷெர்பா’ கூட்டம் உதய்பூரில் டிசம்பர் 4 முதல் 7ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் ஜி-20 மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் வரும் டிச. 5ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக பல்வேறு துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதனுடன் சுற்றுலா, கலாசாரம் மற்றும் திருவிழாக்கள் ஆகியவை ஜி-20 நிகழ்வுகளுடன் இணைக்கப்படும். ஜி-20 என்ற மாபெரும் நிகழ்வின் மூலம் ‘பிராண்ட்’ இந்தியா விளம்பரப்படுத்தப்படும். கூட்டங்கள் நடைபெறும் நகரின் சுற்றுலா இடங்களும் காட்டப்படும். மேலும், அங்குள்ள கலை, கலாசாரம் போன்றவை காட்சிப்படுத்தப்படும்.

நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜி-20 தொடர்பான கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கடந்த காலங்களில் சீனாவில் 14 நகரங்களிலும், இந்தோனேசியாவில் 25 நகரங்களிலும் ஜி-20 கூட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவில் மேலும் சிறப்பாக நடத்த மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் 75 பல்கலைக்கழகங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அங்கு பொருளாதார விவகாரங்கள், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், சர்வதேச விவகாரங்கள், எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

ஜி-20 நாடுகளைத் தவிர, பங்களாதேஷ், மொரீஷியஸ், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவார்கள். ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன், இந்தியாவில் ஜி-20 மாநாட்டு நிகழ்ச்சிகள் அடுத்தாண்டு முழுவதும் கொண்டாடப்படும்’ என்றன.

Tags : India ,G-20 , India to chair G-20 tomorrow with 'One Earth, One Family, One Future' slogan: 100 memorials to be lit up across the country
× RELATED உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட...