×

அதானி குழுமம் பங்குகளை வாங்கியதால் செய்தி நிறுவன இயக்குனர்கள் திடீர் விலகல்

புதுடெல்லி: செய்தி நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமம் வாங்கியதால், அந்த செய்தி நிறுவனத்தின் இயக்குனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் தங்களது பதவியில் இருந்து விலகினர். பிரபல தனியார் செய்தி நிறுவனமான ‘என்டிடிவி’-யின் நிறுவனர் மற்றும் இயக்குனர்களாக பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் உள்ளனர். இந்த நிறுவனத்தின் 29.18 சதவீதம் பங்குகளை பிரபல தொழிலதிபரான கவுதம் அதானியின் குழுமம் கைப்பற்றியது.

இந்நிலையில், நேற்று நடந்த வாரிய கூட்டத்தின் முடிவில், பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராயின் ஆகியோர் தங்களது இயக்குனர்கள் பதவியில் இருந்து விலகினர். அதையடுத்து சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா மற்றும் செந்தில் சின்னியா செங்கல்வராயன் ஆகியோர் புதிய இயக்குனர்களாவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதானி குழுமத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான விஷ்வபிரதான் வர்த்தக தனியார் நிறுவனம், என்டிடிவி நிறுவனத்திற்கு உதவியாக இருந்த ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் 99.5 சதவீத பங்குகளை கடந்த ஆகஸ்டில் வாங்கியிருந்தது.

முன்னதாக ஆர்ஆர்பிஆர் நிறுவனம், என்டிடிவி-யின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருந்தது. அதனை, அதானி குழுமம் தன்வசப்படுத்தியதால், என்டிடிவி-யின் அடுத்த 26 சதவீத பங்குகளையும் விலைக்கு வாங்க தயார் என அதானி குழுமம் தெரிவித்தது. இதனால், என்டிடிவி-யின் 55.18 சதவீத பங்குகள் அந்த குழுமத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் என்டிடிவி-யின் உரிமையாளராவதற்கு வழிவகுக்கிறது. எனினும், என்டிடிவி-யின் 32.26 சதவீத பங்குகளை பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி தங்கள் வசம் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Tags : Adani Group , Abrupt departure of news agency directors as Adani Group buys shares
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...