×

குஜிலியம்பாறை அருகே ரூ100 கோடி ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு: இந்து அறநிலைய துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே தீண்டாக்கல் பகுதியில் வீரபாண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமாக தீண்டாக்கல் மற்றும் சுற்றுப்பு பகுதிகளில் உள்ள சுமார் 180.98 ஏக்கர் புஞ்சை நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இந்த நிலங்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

இந்த வழக்கில் சட்டப்பிரிவு 78 மற்றும் 79ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுமாறு திண்டுக்கல் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமித்திருந்த 21 பேரிடம் இருந்து நிலங்களை வருவாய் துறையினர் மீட்டு கையகப்படுத்தினர். இப்பணியில் திண்டுக்கல் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் சுரேஷ், வட்டாட்சியர் ரமேஷ், தனி வட்டாட்சியர் விஜயலட்சுமி, இத்துறை இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, கோயில் செயல் அலுவலர் முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்திய பின்னர், அதற்கான ஆவணங்கள், நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலங்களை, நேற்று வருவாய் துறையினர் கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட நிலங்கள் அனைத்திலும் உடனடியாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. அதில், இந்து அறநிலையத் துறை சார்பில், ‘இந்த நிலம் தீண்டாக்கல் அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமானது.

மேற்படி நிலத்தில் அத்துமீறி நுழைபவர்கள், ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Kujiliamparai ,Hindu Charities Department , Recovery of Rs 100 crore encroached temple lands near Kujiliamparai: Hindu Charities Dept. says notice board
× RELATED சித்திரை திருவிழாவையொட்டி...