×

அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்: சொத்து குவிப்பு வழக்கு தொடரும் என அறிவிப்பு..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, சென்னை, கோவை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து குவித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், டி.க.ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, வேலுமணி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தவே, வக்கீல் ஜெ.கருப்பையா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். டெண்டர் ஒதுக்கியத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்றும் வெளிப்படையான முறையில் தான் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் அரசு உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மத்திய தணிக்கைத்துறை அறிக்கை அடிப்படையில் வழக்கு தொடர்பட்டுள்ளதாகவும், ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. தொடர்ந்து அறப்போர் இயக்கம் சார்பில், ஒரே ஐ.பி. முகவரியில் டெண்டர்கள் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அதில் உறவினர்கள், நெருங்கியவர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னாவும் ஆஜராகி இருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, எஸ்.பி.வேலுமணியின் சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். இதன் மூலம் சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேசமயம் அவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Maji ,Minister ,GP ,Veleyer ,iCort , S.P. Velumani, Tender Malpractice, Chennai High Court
× RELATED 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த...